பாஜகவை பின்னுக்கு தள்ளிய நோட்டா: சுப்பிரமணியன் சுவாமி வேதனை

  • IndiaGlitz, [Sunday,December 24 2017]

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலை பெற்று வருவது அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஒருங்கிணைந்த அதிமுக, இரட்டை இலை சின்னம், ஈபிஎஸ்-ஓபிஎஸ் இணைப்பு, ஆளுங்கட்சி என்ற பலம் என பல சாதகமான அம்சங்கள் இருந்தும் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் பெரும் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்

அதேபோல் உடைந்து போயிருக்கும் அதிமுக, தேர்தல் தினத்தில் வெளிவந்த 2ஜி வழக்கின் சாதகமான தீர்ப்பு, பல கட்சிகளின் கூட்டணி ஆகிய சாதகமான அம்சங்கள் இருந்தும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் டெபாசிட் பெறுவாரா? என்ற நிலை தான் இப்போது உள்ளது.

இந்த நிலையில் திராவிட கட்சிகளுக்கு மாற்று நாங்கள் தான் அறைகூவல் விடுத்த பாஜகவினர் மற்றும் நாம்தமிழர் கட்சியினர்கள் பெரும் பரிதாபத்தில் உள்ளனர். நிச்சயம் இரு கட்சி வேட்பாளர்களும் டெபாசிட் பெறப்போவதில்லை என்பது தெரிகிறது. அதைவிட கொடுமையான விஷயம் நோட்டாவை விட பாஜக குறைவான வாக்குகள் பெற்றுள்ளது என்பதுதான். மத்தியில் ஆளும் கட்சி, மாநிலத்தில் இவ்வளவு குறைவான வாக்குகளை பெற்றிருப்பது அதன் தமிழக தலைமையின் நம்பிக்கைக்கு சோதனையாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, '“மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கு தமிழகத்தின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைவான வாக்குகள் கிடைத்துள்ளது. இது தமிழக பா.ஜ.கவின் சாதனை. இதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்”  என்று கூறியுள்ளார்.