பொது இடத்தில் அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக பெண் உறுப்பினர்!!! நடந்தது என்ன???

  • IndiaGlitz, [Saturday,June 06 2020]

 

டிக்டாக் பிரபலம் மற்றும் பாஜக பெண் உறுப்பினருமான சோனாலி போகாட் விவசாய உற்பத்தி சந்தையில் வேலைப் பார்க்கும் அதிகாரி ஒருவரை பொது இடத்தில் வைத்து செருப்பால் சரமாரியாக அடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹரியாணாவின் சட்டச் சபை தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் இவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். தேர்தலில் இவர் படுதோல்வி அடைந்ததார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஹிசார் என்ற இடத்தில் இயங்கி வரும் விவசாய உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் சந்தைக்கு இவர் சென்றிருக்கிறார். அங்கு உற்பத்தி சந்தை குழு உறுப்பினராக பணியாற்றும் சுல்தான் சிங் என்பவரை சந்தித்து இருக்கிறார். விவசாயிகள் அளித்த புகாருடன் தான் வந்திருப்பதாக தெரிவித்த சோனாலி போகாட் அவரிடம் புகார் குறித்து விளக்கம் கேட்டிருக்கிறார். அப்போது நடந்த வாக்குவாதம் சண்டையாக முற்றியிருக்கிறது. தீடீரென செருப்பை கழட்டி சுல்தான் சிங்கைத் தாக்கத் தொடங்கிய சோனாலி போகாட் என்னை விட்டு விடுங்கள், நான் புகாரை சரி செய்கிறேன் என்று பல முறை சொல்லியும் அவர் நிறுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சோனாலி போகாட் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல் துறை அதிகாரிகள் சம்பவத்தில் தொடர்புடைய இருவரின் பேரிலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நடந்த சம்பவத்தைக் குறித்து சுல்தான் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “என்னைத் தெரியுமா என்று சோனாலி போகாட் கேட்டதாகவும், அதற்கு சுல்தான் சிங்,

“நீங்கள் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றீங்களே.. எனக்குத் தெரியும், உங்களது புகார்களை ஏற்றுக் கொள்கிறேன். அதை சரிசெய்கிறேன் எனக் கூறினேன். பிறகு என்னை ஏன் தேர்தலில் ஏற்றுக்கொள்ள வில்லை என்று சோனாலி கேட்டார், அதற்கு நான் என்னுடைய வீடு ஆதம்பூரில் இல்லை, நான் எப்படி உங்கள் தொகுதிக்கு வந்து ஓட்டுப் போட முடியும். அதோடு அது எப்பவோ நடந்தது, இப்போது ஏன் அதைப்பற்றி கேட்கிறீர்கள்” என நான் கேட்டேன். இதற்காக என்னைத் தவறாகச் பேசுகிறீர்கள் என்று சொல்லி என்னை செருப்பைக்  கழட்டி அடிக்கத் தொடங்கி விட்டார். நான் எதுவும் தவறாக பேசவில்லை. அவ்வளவுதான் நடந்தது என சுல்தான் சிங்க விளக்கம் அளித்து இருக்கிறார்.

இச்சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட காணொலி சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் கோரிக்கை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.