திருடன் கேரக்டருக்கு நேதாஜி பெயரா? 'கோட்' படத்திற்கு பாஜக பிரபலம் கண்டனம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
‘கோட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற திருடன் கேரக்டருக்கு நேதாஜி பெயர் வைப்பதா என கண்டனம் தெரிவித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் என்பவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நீங்கள் இனிமேல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்துள்ளீர்கள். அதனால் இப்போது வெளியாகியுள்ள 'தி கோட்' உங்களின் கடைசி படம் என்று நினைக்கிறேன். திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் போதே, அதிலிருந்து முற்றிலும் விலகி அரசியலில் ஈடுபடுவதாக அறிவி்த்துள்ளீர்கள். கமல்ஹாசனுக்கு இல்லாத துணிச்சல், உறுதி உங்களுக்கு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தி கோட்' படம் பார்த்தேன். இந்தப் படத்தில் ஒரு காட்சி என் மனதை மிகவும் காயப்படுத்தியது தொடர்பாக தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். இப்படத்தில் செல்போன் திருடனாக நடித்துள்ள யோகிபாபுவிடம், செல்போனை பெற வேண்டும் என்பதற்காக நீங்கள் பேசும்போது, 'நான் காந்தி.' என்று உங்கள் பெயரை கூறும்பொழுது, பதிலுக்கு யோகிபாபு, 'நீ காந்தி என்றால் நான் சுபாஷ் சந்திரபோஸ்.' என்கிறார். இது இயல்பான கிண்டலாக இருக்கலாம். சுதந்திரம் என்ற லட்சியத்திற்காகவே மகாத்மா காந்தியும், நேதாஜி சுபாஷ் சந்திபோஸும் போராடினார்கள்.
ஆனால், இருவரின் பாதைகளும் வேறு வேறாக இருந்தன. அதனால் மகாத்மா காந்தியையும், நேதாஜியையும் நேர் எதிரெதிரானவர் போல காட்டியிருக்கிரீர்கள். திருடன் கதாபாத்திரத்திற்கு கிண்டலுக்காக கூட நேதாஜி பெயரை பயன்படுத்தியிருக்கக் கூடாது. இந்தியர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வருத்தப்படக்கூடிய காட்சி அமைப்பை உருவாக்கி, மன்னிக்க முடியாத தவறை தெரிந்தோ,தெரியாமலோ செய்து விட்டீர்கள்.
எவ்வித தொலைத்தொடர்பும், நவீன வசதிகளும் இல்லாத காலத்திலேயே கோடிக்கணக்கான இளைஞர்களிடம் சுதந்திரத்தீயை மூட்டியவர் நேதாஜி. அவரை தங்கள் கதாநாயகனாக, லட்சியத் தலைவராக போற்றி வணங்கி வாழ்பவர்கள் கோடிக்கணக்கில் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். நேதாஜி இல்லாமல் இருந்திருந்தால் நமக்கு சுதந்திரம் கிடைக்க இன்னும் தாமதமாகியிருக்கலாம். அவரின் பெயரைக் கொச்சைப்படுத்தும் விதமாக காட்சி அமைந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
தி கோட் படத்தில் சுபாஷ் சந்திரபோஸ் பெயர் எதிர்மறையாக பயன்படுத்தப்படாமல் நீங்களும் பட குழுவும் தவிர்த்திருக்கலாம். நீங்கள் நினைத்தால் இப்போது கூட அதை மாற்ற முடியும். அரசியல் களத்திற்கு வந்திருக்கும் நீங்கள் நேதாஜியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை நீங்கள் மாவீரர் சுபாஷ் சந்திரபோஸ் அவருடைய வரலாற்றை தெரிந்து இருக்க வில்லை என்றால், சில விஷயங்களை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய தேச விடுதலைக்கான அறவழிப் போராட்டம் காந்தியடிகள் தலைமையில் நடந்தபோது, இந்திய மக்கள் படும் துயரைக் கண்டு இந்திய தேசிய ராணுவம் அமைத்து ஆயுதப் போராட்டத்தை நடத்தியவர் சுபாஷ் சந்திர போஸ். தனது தலைமையில் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, உலகெங்கும் உள்ள பாரத மக்களின் ஆதரவுடன், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்திய தேசிய ராணுவத்தை பலமாக கட்டமைத்தார்.
பிரிட்டிஷ் இந்தியாவுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்தது நம் தமிழினம், தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் மிகப்பெரிய ஆளுமையுடன் பல்வேறு தொழில்களில் வெற்றிக் கொடி உருவாக்கியிருந்தனர்.
ஆனால் அனைத்தையும் துறந்து இந்திய தாய் திருநாட்டின் விடுதலைக்காக வீரத்துடன் மாவீரர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் பிரிட்டிஷ் ஏகதிபத்தியத்தை எதிர்த்து பல்லாயிரக்கணக்கில் சிறை சென்றனர், போரில் வீர மரணம் அடைந்தனர் என்பதை நம் சந்ததியினருக்கு நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com