மோடியின் அடுத்த ராஜதந்திரம்
- IndiaGlitz, [Thursday,January 05 2017]
கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற மோடியின் அதிரடி அறிவிப்பால் பொதுமக்கள் பலவிதமான சிரமங்களை சந்தித்தபோதிலும் கருப்புப்பணம், கள்ளநோட்டு, தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் ஆகியவை பெருமளவில் குறைந்துள்ளது. இது மோடியின் அறிவிப்புக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படும் நிலையில் தற்போது மோடியின் இன்னொரு ராஜதந்திர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த 1993ஆம் ஆண்டு மும்பையை மட்டுமின்றி இந்தியாவையே நடுநடுங்க செய்த தொடர் வெடிகுண்டு சம்பவத்திற்கு மூளையாக இருந்த தாவூத் இப்ராஹிம் இந்தியாவின் தேடப்பட்டும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். தற்போது பாகிஸ்தானில் வசித்து வரும் இவருக்கு ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் கோடிக்கணக்கான மதிப்பில் சொத்துக்கள் உள்ளது.
இதுகுறித்து கடந்த 2015ஆம் ஆண்டு பாரத பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தபோது தாவூத் இப்ராகிமின் சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்ற ஐக்கிய அரபு எமிரேட் அரசு தற்போது தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான ரூ.15,000 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்க்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடியின் ராஜதந்திரமே காரணம் என்று பாஜகவின் அதிகாரபூர்வமான சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.