பெங்களூரில் கைது செய்யப்பட்ட பிட்காயின் ஹேக்கர்… அரசாங்க வலைத் தளத்திலும் கைவரிசையா?

  • IndiaGlitz, [Saturday,January 16 2021]

வெளிநாடுகளில் பிட்காயின் மோசடி மற்றும் ஹெக்கிங் செய்யப்படும் குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, பில்கேட்ஸ், உலகின் பெரிய பணக்காரர் எலான் மஸ்க் போன்றோரின் பெயரைப் பயன்படுத்தி பிட்காயின் ஹேக்கிங் குற்றம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து பிட்காயின் நாணய வர்த்தகத்தில் குற்றங்கள் நடைபெற்று வருவதால் பிட்காயின் குறித்த அச்சமும் தற்போது வர்த்தகத் துறையில் அதிகரித்து இருக்கிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிட்காயின் ஹேக்கிங் செய்த குற்றத்திற்காக ஸ்ரீகிருஷ்ணா எனும் நபர் நவர்பர் 18 ஆம் தேதி கைது செய்யப்பட்டு உள்ளார். இவரிடம் இருந்து 1.2 மில்லியன் டாலர் மதிப்புள்ள பிட்காயின் நாணயம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நபர் கர்நாடக அரசுக்குச் சொந்தமான வர்த்தகத் வலைத்தளத்தைப் பயன்படுத்தி ஹேக்கிங் செய்ததாக அம்மாநில இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பாட்டீல் தெரிவித்து உள்ளார்.

மேலும் தற்போது ஹேக்கிங் செய்துள்ள பிட்காயின் நாணயங்கள் அனைத்தும் அரசாங்க வலைத்தளத்தை பயன்படுத்தி 10 போக்கர்களிடம் இருந்து 3 முறை பரிவர்த்தனையில் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் கடந்த 2019 ஆம் வருடத்தில் இருந்தே அரசாங்க வலைத்தளத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற ஹேக்கிங் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் நடைபெற்று வந்த பிட்காயின் ஹேக்கிங் குற்றங்கள் தற்போது இந்தியாவிலும் நடைபெற்று இருக்கிறது. இதனால் வர்த்தகத் துறையில் பிட்காயின் குறித்த அச்சம் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.