மக்களின் சூப்பர் ஸ்டாராக மாறுவாரா சூப்பர் ஸ்டார் ரஜினி?
- IndiaGlitz, [Saturday,December 12 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிரதமர் முதல் சாமானிய ரசிகன் வரை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் அவர்கள் இந்த ஆண்டு மக்களின் மத்தியிலும் சூப்பர் ஸ்டாராக மாறுவதற்கு அரசியலில் குதிக்க உள்ளார். திரையுலகில் அவர் செய்த சாதனைகளை போல அரசியலிலும் செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். என்றாலும் அவரது அரசியல் பிரவேசம் தமிழகத்தில் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி
கடந்த 1996 ஆம் ஆண்டு தனது வாய்ஸ் காரணமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதன் பின்னரும் ஒவ்வொரு தேர்தலின் போதும் ரஜினியின் வாய்ஸ் யாருக்கு ஆதரவாக இருக்கும் என்று பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் அவர் தனது வாய்ஸையும் நிறுத்திக்கொண்டார். ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஓட்டு போடலாம் என்று அவர் தெரிவித்தார்
இந்த நிலையில் தான் தமிழகத்தின் இரண்டு அரசியல் ஆளுமைகளாக இருந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதி அடுத்தடுத்து காலமானதை அடுத்து தமிழகத்தில் ஆளுமை இல்லாத ஒரு மிகப்பெரிய வெற்றிடம் இருப்பதை அவர் உணர்ந்தார். அந்த வெற்றிடத்தை நிரப்ப யாரும் இல்லாததை புரிந்து கொண்ட ரஜினிகாந்த், தானே அந்த வெற்றிடத்தை நிரப்ப முடிவு செய்து, தன்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து அரசியலில் குதிக்கவிருப்பதாக அறிவித்தார். கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி மிகத்தெளிவாக தான் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் அடுத்து வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார்
அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்று அவர் சொன்ன பிறகும் அவரது எதிரிகள் ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்றும் கூறிக் கொண்டே வந்த நிலையில் சொன்ன சொல்லை என்றுமே காப்பாற்றும் குணமுடைய ரஜினிகாந்த், கடந்த சில நாட்களுக்கு முன் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதை உறுதி செய்து, அதற்கான பணிகளும் தொடங்கி விட்டதையும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
திரையில் சூப்பர் ஸ்டாராக இருந்து கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்துள்ள ரஜினிகாந்த், மாறி மாறி ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை மூன்றாவது அணி வெற்றி பெற்றதில்லை, அதேபோல் எந்த கட்சியிலும் இல்லாமல் நடிகராக இருந்து நேரடியாக அரசியல் கட்சி ஆரம்பித்த எந்த ஒரு நடிகரும் இதுவரை தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வெற்றி பெற்றதில்லை. யாரும் செய்யாத இந்த சாதனையை ரஜினி செய்யவும், மக்களின் முதல்வராகவும் மக்களின் சூப்பர் ஸ்டாராகவும் மாறவும் இந்த பிறந்த நாளில் அவரை வாழ்த்துவோம்