10 மாநிலங்களுக்குப் பரவிவிட்ட பறவைக் காய்ச்சல்… பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஜனவரி 4 ஆம் தேதி இந்தியாவின் ராஜஸ்தான் பகுதியில் உறுதிச் செய்யப்பட்ட H5N8 பறவைக் காய்ச்சல் தற்போது 10 மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று முன்தினம் இந்தியாவின் 15 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் கால்நடை வளர்ப்புத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும் எனவும் இது மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடுமோ? என்ற பீதியும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கொரோனா போல மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு இந்த பறவைக் காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் கால்நடைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவே கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அறிகுறி கொண்ட பகுதிகளில் வளர்க்கப்படும் கோழி, வாத்து போன்ற பறவை இனங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பாதுகாப்பான முறையில் சமைக்கப்பட்ட கோழி இறைச்சியினால் பாதிப்பு எதுவும் இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தாலும் பெரும்பாலான மக்கள் இதுபோன்ற சமயங்களில் கோழி இறைச்சியை தவிர்த்து வருகின்றனர். இதனால் கோழி, முட்டை போன்றவற்றின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த 4 ஆம் தேதி ராஜஸ்தானின் சில பகுதிகளில் 425 காகங்கள் இறந்த நிலையில் அவற்றிற்கு H5N8 பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் இந்தப் பறவைக் காய்ச்சல் பாதிப்பை அதனால் காகங்கள் உயிரிழந்தன. அதேபோல இமாச்சலப் பிரதேசத்தின் காங்கரா நகரில் உள்ள தேசிய சரணாலயத்தில் 1,800 வெளிநாட்டு பறவைகள் இதே தொற்றால் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து கேரளாவின் கோட்டயம் மற்றும் ஆலப்புழா பகுதியில் ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் தொற்றினால் இதுவரை 12 ஆயிரம் வாத்து மற்றும் கோழிகள் இறந்து உள்ளன. அதேபோல பண்ணைகளில் வளர்க்கப்பட்ட 32 ஆயிரம் பறவை இனங்கள் கொல்லப்பட்டன. இதையடுத்து ஹரியாணா, குஜராத் மற்றும் உத்திரப்பிரேசத்தின் சில மாவட்டங்களிலும் H5N8 தொற்று இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
கடந்த 9 ஆம் தேதி டெல்லியில் உள்ள மயூர் விகார் பூங்காவில் 200 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இத்தொற்றால் உயிரிழந்தன. அதையடுத்து மராட்டி மாநிலத்தின் பர்பான் மாவட்டம் முரும்பா பகுதியில் 800 க்கும் மேற்பட்ட கோழிகள் இதே தொற்றால் உயிரிழந்ததும் ஆய்வில் உறுதிச் செய்யப்பட்டது. தற்போது இந்த வரிசையில் 10 ஆவது மாநிலமாக உத்திரக்காண்டின் கொத்வார் மற்றும் டேராடூன் பகுதிகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு இத்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தற்போது தொடங்கப்பட்டு உள்ள நிலையில் பறவைக் காய்ச்சல் குறித்த அச்சம் அதிகரிக்க ஆரம்பித்து உள்ளது. இதுவரை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், கேரளா, ஹரியாணா, குஜராத், உத்திரப் பிரதேசம், டெல்லி, மராட்டியம், உத்திரகாண்ட் என 10 மாநிலங்களில் இந்தப் பறவைக் காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout