ஒரு முழுநீள 'தல' புராணம்
இதுவரை வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த ஆர்.கே.சுரேஷ், ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள படம்தான் 'பில்லா பாண்டி. அதிலும் 'தல' ரசிகராக இந்த படத்தில் அவர் நடித்திருப்பதால் அஜித் ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. அஜித் ரசிகர்கள் உள்பட அனைத்து ரசிகர்களின் ஆதரவு இந்த படத்திற்கு கிடைக்குமா? என்பதை தற்போது பார்ப்போம்.
'தல' ரசிகர் மன்றத்தின் மூலம் அணைத்'தல'ப்பட்டி என்ற கிராமத்தில் நல்லது செய்து வரும் இளைஞர்கள் ஆர்.கே.சுரேஷும் அவரது நண்பர்களும். கிராமத்து திருவிழாவில் தல பாடல்கள் தொடங்கி, சாதி பிரச்சனையை சிம்பிளாக முடித்து வைப்பது முதல் சாதி மாறி காதலிக்கும் ஜோடிகளை சேர்த்து வைப்பது வரை பொது தொண்டுகளை செய்து வருகிறது ஆர்.கே.சுரேஷின் 'தல' மன்றம். ஒரே மன்றம் என சுற்றி கொண்டிருப்பதால் மாமா ஜி.மாரிமுத்து, ஆர்.கே.சுரேஷுக்கு பெண் கொடுக்க மறுக்கின்றார். ஆனால் அவருடைய மகள் சாந்தினியோ, கட்டினால் ஆர்.கே.சுரேஷைத்தான் கட்டுவேன் என ஒற்றைக்காலில் நிற்கின்றார்.
இந்த நிலையில் பேத்தி இந்துஜாவுக்காக சங்கிலி முருகன் கட்டும் வீட்டை காண்ட்ராக்ட் எடுத்து கட்டி தருகிறார் ஆர்.கே.சுரேஷ். இந்த கட்டிடத்தின் வேலையின்போது ஒருசில மனிதாபிமான சம்பவ்ங்கள் ஆர்.கே.சுரேஷ் மீது நல்ல எண்ணத்தை இந்துஜாவுக்கு ஏற்படுத்துகிறது. இது காதலாக மாற, கிரகப்பிரவேசம் அன்று தான் ஆர்.கே.சுரேஷை காதலிப்பதாகவும், அவருடன் மனதளவில் வாழ்ந்துவிட்டதாகவும் ஓப்பனாக கூறுகிறார். இதனால் இந்துஜாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைகின்றனர். இந்த நிலையில் திடீரென நடக்கும் ஒரு விபத்தில் இந்துஜாவின் குடும்பமே மரணம் அடைந்துவிடுகிறது. இந்துஜாவுக்கும் தலையில் அடிபட்டு ஞாபக சக்தியை இழந்து குழந்தை போல் ஆகிவிடுகிறார். இந்த நிலையில் தன்னை காதலித்து குடும்பத்தையே தொலைத்துவிட்டு அனாதையாக நிற்கும் இந்துஜாவை காப்பாற்றுவதா? காதலிக்கும் மாமா பெண் சாந்தினியை கைப்பிடிப்பதா? என்ற குழப்பத்தில் இருக்கும் ஆர்.கே.சுரேஷ் என்ன முடிவெடுக்கின்றார்? என்பதுதான் மீதிக்கதை.
கிராமத்து இளைஞருக்குரிய சேட்டை, தல ரசிகர் என்ற அலம்பல், காதலர்களை சேர்த்து வைக்கும் புத்திசாலித்தனம், இந்துஜாவை குழந்தை போல் வைத்து காப்பாற்றும் இரக்க குணம் என ஆர்.கே.சுரேஷ் ஒரே படத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்த முயன்றுள்ளார். இருப்பினும் இழுத்து இழுத்து டயலாக் பேசும் பாணியை மாற்றி கொள்வது நல்லது.
சாந்தினிக்கு ஆர்.கே.சுரேஷை நான்கு காட்சிகளில் சுற்றிவருவது, பின் ஒரு டூயட் பாடுவது என சுலபமான வேலை. இந்துஜா கேரக்டருக்கு விபத்து ஏற்பட்டதும் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. 'மூன்றாம் பிறை' ஸ்ரீதேவியின் நடிப்பை ஒரு பத்து சதவீதம் அளித்திருந்தால் கூட அவருக்கு பாராட்டுக்கள் குவிந்திருக்கும். ஆனால் நல்ல வாய்ப்பை மிஸ் செய்துவிட்டார்.
தம்பி ராமையா வழக்கம்போல் இரட்டை அர்த்தத்துடன் கூடிய கடி காமெடிகளை தந்துள்ளார். தயாரிப்பாளர் கே.சி.பிரபாத் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். நடிப்பு ஓகே. ஜி.மாரிமுத்து, சங்கிலி முருகன், 'சுந்தரபாண்டியன்' செளந்தர் ஆகியோர் நடிப்பு ஓகே.
இசையமைப்பாளர் இளையவன் பாடல்களில் சொதப்பினாலும் பின்னணி இசையை நன்றாக கம்போஸ் செய்துள்ளார். ஜீவனின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் அம்சமாக உள்ளது.
இயக்குனர் ராஜ்சேதுபதி, 'தல' அஜித் ரெஃப்ரன்ஸ் இருந்தால் போதும், படம் ஓடிவிடும் என்ற நம்பிக்கையில் கதையிலும், திரைக்கதையிலும் கவனம் செலுத்தவில்லை என்பது தெரிகிறது. தல் அஜித் நடித்த படமாக இருந்தாலே, திரைக்கதை விறுவிறுப்பாக இல்லையென்றால் தோல்வி அடைந்துவிடும் என்பது தெரியாமல் முழுக்க முழுக்க 'தல' புராணத்தையே பாடியுள்ளார். அதிலும் ஆர்.கே.சுரேஷும் அவரது நண்பர்களும் அஜித் குறித்த வசனங்கள் பேசுவது ஒருசில காட்சிகளில் அஜித்தை மட்டம் தட்டுவது போன்றும் உள்ளது.
இந்துஜாவுக்கு விபத்து ஏற்பட்டதும் டாக்டர், அவர் 7 வயது குழந்தையாக மாறிவிட்டார் என்றுதான் கூறினார். ஆனால் இயக்குனர் அந்த கேரக்டரை மனநிலை சரியில்லாத கேரக்டர் போல் மாற்றிவிட்டார். ஒரே ஒருமுறை அவர் மூன்றாம் பிறை படத்தை பார்த்திருந்தால் இந்த தவறை அவர் செய்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. இந்துஜா மீண்டும் குணமாகும் காட்சியை எல்.கே.ஜி குழந்தை கூட நம்பாது. இன்னும் கொஞ்சம் சீரியஸாக யோசித்திருக்கலாம்.
பாலாவினால் அறிமுகம் செய்யப்பட்ட ஆர்.கே.சுரேஷ் ஒரு நல்ல நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் தனது திறமைக்கும் தோற்றத்திற்கும் பொருந்தும் வகையில் நல்ல கதையை தேர்வு செய்து நடித்தால் அவர் இன்னொரு விஜய்சேதுபதியாக வாய்ப்பு உள்ளது. இனிமேலாவது சுதாரிப்பார் என்று நம்புவோம்.
மொத்தத்தில் 'தல'யை நம்பி கதையை கோட்டைவிட்ட பாண்டி தான் இந்த 'பில்லா பாண்டி'.
Comments