மணிரத்னம் மீதான தேசத்துரோக வழக்கு: பீகார் போலீஸின் அதிரடி முடிவு
- IndiaGlitz, [Thursday,October 10 2019]
மணிரத்னம் உள்பட 49 திரையுலக பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய சமீபத்தில் பீகார் நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது இந்த வழக்கை பீகார் போலீசார் வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி 49 பேர் புகார் அளித்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 இந்திய திரையுலக பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடந்த ஜுலை மாதம் எழுதிய கடிதத்தில் இந்தியாவில் மதம் என்ற பெயரில் நடந்து வரும் கும்பல் வன்முறைக்கு முடிவு கட்டுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர், பிரதமருக்கு கடிதம் எழுதி நாட்டின் நற்பெயரை கெடுப்பதோடு, பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் அடிப்படையில் 49 பேர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய பீகார் மாநில காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் 49 பேர் மீது புகார் அளித்த வழக்கறிஞர் தவறான தகவல்கள் அளித்ததை பீகார் காவல்துறை கண்டுபிடித்தது. இதனால் தேசத்துரோக வழக்கை வாபஸ் பெறுவது மட்டுமின்றி புகார் அளித்த வழக்கறிஞர் மீது காவல்துறை வழக்குத் தொடரும் என்று பீகார் மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.