பீகார் கொள்ளை கும்பலை பிடிக்க உதவிய நடிகை நயன்தாரா
- IndiaGlitz, [Saturday,December 23 2017]
பாஜக தலைவர் ஒருவரின் விலையுயர்ந்து செல்போனை திருடிய கொள்ளை கும்பலை பிடிக்க அம்மாநில போலீசார் நயன்தாராவின் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளதாக ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது.
பீகார் மாநில பாஜகவின் முக்கிய தலைவர் சஞ்சய்குமார் என்பவரது விலையுயர்ந்த செல்போன் சமீபத்தில் திருடுபோனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை பெண் போலீஸ் அதிகாரி மதுபாலா தேவியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரணை செய்த மதுபாலா தேவி, சஞ்சய்குமாரின் செல்போனை ஹஸ்னைன் என்பவர் பயன்படுத்துவதை கண்டுபிடித்தார். பின்னர் அவரை தொடர்பு கொண்டு தான் அவரை காதலிப்பதாகவும் கூறினார். முதலில் ஹஸ்னைன் இதனை நம்ப மறுத்தாலும், பின்னர் மதுபாலாதேவியின் தொடர்ச்சியான புரபோசலால் காதல் வலையில் வீழ்ந்தான். மேலும் தனது புகைப்படம் என்று நடிகை நயன்தாராவின் புகைப்படத்தையும் அனுப்பி வைத்தார். நயன் தாராவின் புகைப்படத்தை பார்த்து மயங்கிய செல்போன் திருடன் உடனே நேரில் சந்திக்க முடிவு செய்தான்.
இதன்பின்னர் நேரில் சந்திக்க திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஹஸ்னைன் வரவழைத்தார் அந்த பெண் போலீஸ் அதிகாரி. அங்கு வந்த ஹஸ்னைனை மாறுவேடத்தில் இருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவனிடம் நடத்திய விசாரணையில் திருடுபோன செல்போனை இன்னொரு கொள்ளையனிடம் இருந்து ஹஸ்னைன் வாங்கியதாக கூறவே, அந்த குற்றவாளியையும் போலீசார் பிடித்தனர். நடிகை நயன்தாராவின் புகைப்படத்தை உபயோகித்து சமயோசிதமாக கொள்ளையர்களை பிடித்த மதுபாலா தேவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.