பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் அறிவிப்பு
- IndiaGlitz, [Monday,June 19 2017]
இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்ய வரும் ஜூலை 17ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இன்று ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முடிவெடுக்க பாஜக தலைவர்களின் சிறப்பு கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க எம்பி-க்கள், முக்கிய நிர்வாகிகள் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பாஜக சார்பில் நிறுத்தப்படும் குடியரசு தலைவர் வேட்பாளராக பீகார் மாநிலத்தின் கவர்னர் ராம்நாத் கோவிந்த் என்பவர் நிறுத்தப்படுவதாக அமித்ஷா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் பொதுவேட்பாளர் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.