விவசாயி வங்கிக் கணக்கில் 52 கோடி ரூபாய்? தொடர் கதையாகும் மர்மம்!
- IndiaGlitz, [Monday,September 20 2021]
பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 6 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.960 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. தற்போது அதே பீகார் மாநிலத்தில் விவசாயி ஒருவரின் வங்கிக் கணக்கில் ரூ.52 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு உள்ள விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்கி கணக்குகளில் அதிகப்படியான பணம் டெபாசிட் செய்யப்படும் விவகாரம் பீகார் மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பாட்னாவில் உள்ள கிராம வங்கியில் கணக்கு வைத்திருந்த இளைஞர் ஒருவரின் வங்கிக் கணக்கில் 5.5 லட்சம் ரூபாயை தவறுதலாக வங்கி அதிகாரிகள் பணத்தைச் செலுத்திவிட்டனர். இதைத் திரும்ப கேட்டபோது அவர் சொல்லிய கதை நாடு முழுவதும் பிரபலமானது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 6 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது எனச் சோதனையிட்டபோது ஒரு மாணவரின் கணக்கில் ரூ.900 கோடியும் மற்றொரு மாணவரின் வங்கிக் கணக்கில் ரூ.60 கோடியும் இருந்த விவகாரம் மக்கள் மத்தியில் கடும் பரபரப்பை கிளப்பியது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதுபோன்ற தெளிவான விளக்கம் எதுவும் வெளியிப்படாத நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
முசாபூர் மாவட்டத்தில் உள்ள ராம்பகதூர் ஷா எனும் விவசாயி தனது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை வாடிக்கையாளர் சேவை மையம் வழியாக சோதனையிட்டு பார்த்துள்ளார். அப்போது ராம்பகதூர் ஷா வங்கிக் கணக்கில் ரூ.52 கோடி ரூபாய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்தப் பணத்தை எப்படியும் அரசாங்கம் எடுத்துக் கொள்ளும். என்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து சிறிய தொகையை எடுத்துத் தாருங்கள் என அருகில் இருந்தவர்களிடம் கூறி பணத்தை எடுத்துச் சென்ற சம்பவம் தற்போது மீண்டும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.