'பிகில்': சாதிக்க விரும்பும் பெண்களுக்கான பேரொலி
விஜய் அட்லி கூட்டணியில் வெளியான தெறி மற்றும் மெர்சல் ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது மூன்றாம் முறையாக பிகில் படத்தில் இருவரும் இணைந்துள்ளனர். ரிலீசுக்கு முன்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை விஜய்-அட்லி கூட்டணி நிறைவு செய்துள்ளதா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.
சென்னையில் உள்ள ஒரு முக்கிய பகுதியில் மக்களின் நன்மைக்காக ரவுடியிசம் செய்து வருகிறார் ராயப்பன் (விஜய்). வழக்கம்போல் ரவுடி ராயப்பனுக்கு அதே பகுதியில் இருக்கும் எதிரிகள் டேனியல் பாலாஜியும் அவருடைய தந்தையும். இருதரப்பிற்கும் இடையே அவ்வப்போது மோதல்கள், இழப்புகள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் ராயப்பன் தனது மகன் மைக்கேலை (விஜய்) ரவுடியிசம் வாடையின்றி விளையாட்டு துறைக்கு சாதிக்க அனுப்புகிறார். அவரும் தந்தையின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் கால்பந்து விளையாட்டில் வெற்றி மேல் வெற்றி பெற்று இந்திய அணிக்கு கேப்டன் ஆகும் தகுதியை அடையும் அளவிற்கு முன்னேறுகிறார். இந்த நிலையில் இந்திய அணியில் கலந்து கொள்வதற்காக மகன் மைக்கேல், அவருடைய நண்பர் கதிர் ஆகியோர்களை வழியனுப்ப ராயப்பன் வரும்போது அங்கு ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. அந்த அசம்பாவிதத்தால் ராயப்பனுக்கு என்ன நேர்ந்தது? மைக்கேலின் கால்பந்து கனவு என்ன ஆகிறது? என்பதுதான் ஒருபக்கத்தின் கதை.
இன்னொரு பக்கம் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கோச் ஆக இருக்கும் கதிர், ஒரு போட்டிக்காக மைக்கேலின் ஊருக்கு வருகிறார். அப்போது விஜய்யை தாக்க வரும் எதிரிகள் அவருக்கு பதிலாக கதிரை தாக்கி விடுகின்றனர். இதனால் உயிருக்கு அபாயமான கட்டத்தில் கதிர் இருக்கும் நிலையில், கதிரின் கோச் பதவியை கையில் எடுக்கும் மைக்கேல், பெண்கள் கால்பந்தாட்ட அணியை எப்படி கொண்டு செல்கிறார். அந்த அணி வெற்றி பெறாமல் தடுக்க செய்யப்படும் சதிகளை எப்படி முறியடிக்கின்றார் என்பதுதான் இரண்டாம் பாதி கதை
ராயப்பன், மைக்கேல், பிகில் என மூன்று கெட்டப்புகளில் வரும் விஜய், ராயப்பன் கேரக்டரில் அசத்துகிறார். மகனிடம் காட்டும் பாசம், கட்டிப்பிடிச்சுக்கோ என்று கூறும் அன்பு, மகனின் வளர்ச்சிக்கு இடைஞ்சலாக இருப்பவர்களை வீழ்த்தும் விதம் என மாஸ் காட்டுகிறார். பிகில் கேரக்டர் ஒருசில நிமிடங்கள் தான் என்பதால் அதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் மைக்கேல் கேரக்டரில் வழக்கமான ஒரு துள்ளலான, நக்கலான, ரொமான்ஸ் மற்றும் ஆக்சன் விஜய்யை பார்க்கலாம்.
நாயகி நயன்தாரா முதல் பாதியில் சென்னை பாஷை பேசும் சாதாரண பெண்ணாக, விஜய்யை காதலிக்கும் சராசரி கேரக்டரில் வருகிறார். இரண்டாம் பாதியில் திடீரென பெண்கள் கால்பந்தாட்ட அணியில் பிசியோதெரபிஸ்ட் ஆகிறார். இருப்பினும் நயன்தாராவின் நடிப்பை வெளிப்படுத்த என ஒருசில அருமையான காட்சிகளை இயக்குனர் வைத்துள்ளார். குறிப்பாக ஒரு கால்பந்தாட்ட வீராங்கனையை அடுப்படியில் முடக்கி வைத்துள்ள கணவரிடம் நயன்தாரா பேசும் வசனம் சூப்பர்.
பரியேறும் பெருமாள் படத்தில் தனது அருமையான நடிப்பால் அனைவரின் மனதையும் கவர்ந்த கதிர், இந்த படத்தில் ஒரு டம்மி கேரக்டரில் நடித்துள்ளார். முதல் ஐந்து நிமிடத்திற்கு பின்னர் வீல்சேரில் உட்காருவது கதிர் மட்டுமல்ல, அவருடைய கேரக்டரும் தான்.
முதல்பாதியில் அநியாயத்திற்கு நல்லவராக இருக்கும் ஜாக்கி ஷெராப், இரண்டாம் பாதியில் எதிர்பார்த்தது போலவே வில்லனாக மாறுகிறார். ஒரு ஸ்போர்ட்ஸ் படத்தில் இதுபோன்ற ஒரு வில்லனை பல படங்களில் பார்த்துவிட்டோம். இந்த படத்தில் வில்லன் கேரக்டர் பலவீனமாக இருப்பது படத்திற்கும் ஒரு பலவீனமாக கருதப்படுகிறது.
முதல் பாதியில் யோகிபாபுவும் இரண்டாம் பாதியில் விவேக்கும் காமெடி பொறுப்பை கையில் எடுத்து கொள்கின்றனர் இருவரும் அவ்வபோது ஒன்லைன் வசனத்தின் மூலம் சிரிக்க வைக்க முயற்சிக்கின்றனர். ஆனந்தராஜ், ஞானசம்பந்தம், தேவதர்ஷினி ஆகியோர்களும் காமெடி செய்ய முயற்சித்துள்ளனர்.கால்பந்தாட்ட வீராங்கனைகள் தேர்வு இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ். அதுமட்டுமின்றி ஒவ்வொரு வீராங்கனைக்கும் ஒரு மாஸ் காட்சி என அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்த அட்லியை தாராளமாக பாராட்டலாம். குறிப்பாக ரோபோ சங்கர் மகள் பாண்டியம்மாள் கேரக்டர் மனதில் நிற்கும் கேரக்டர். அதேபோல் இந்துஜா, வர்ஷா பொம்மலா, ரெபா மோனிகா என அனைவரின் கேரக்டர்களும் மனதில் நிற்கின்றன.
படத்தின் முதல் பத்து நிமிடங்கள் கதைக்கு சம்பந்தமே இல்லை என்றாலும் விஜய்யை மாஸ் ஆக அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இயக்குனர் அட்லியால் வைக்கப்பட்ட காட்சிகளை விஜய் ரசிகர்கள் மிஸ் செய்யாமல் பார்த்துவிடவும்.
இயக்குனர் அட்லி முதல் பாதி முழுவதையும் முழுக்க முழுக்க ரசிகர்களுக்காகவே மாஸ் காட்சிகள், பாடல், டான்ஸ், ஆக்சன் என திரைக்கதையை நகர்த்திவிட்டு இரண்டாம் பாதியில் தான் கதையை சொல்ல வருகிறார். இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாகவும் சீரியஸாகவும் சிலபல திருப்பங்களுடன் செல்வதால் நிமிர்ந்து உட்கார முடிகிறது. முதல் பாதியில் ராயப்பன் விஜய்யும் ஜாக்கி ஷெராப்பும் சந்திக்கும் காட்சி மாஸ் என்றால், இரண்டாம் பாதியில் டெல்லி போலீஸ் ஸ்டேஷனில் விஜய், போலீசாருக்கு கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியம் பக்கா மாஸ் எனலாம். ‘நம்ம தகுதிக்கு என்ன செய்ய முடியுமோ அதை மட்டும்தான் செய்யணும் என போலீஸ் அதிகாரி கேலியுடன் பேசிய அதே வசனத்தை விஜய் ஒருசில நிமிடங்கள் கழித்து அதே போலீஸ் அதிகாரியிடம் பேசும் காட்சியில் கைதட்டல் பெறுகிறது. அதேபோல் ‘நம்ம எதிரிக்க்கு நாம கொடுக்குற சரியான தண்டனை அவங்க முன்னாடி கெத்தா வாழ்ந்து காட்டுறதுதான் என்ற வசனமும், சாதிப்பதற்கு முகம் தேவையில்லை போன்ற வசனங்களும் கவனத்தை பெறுகின்றன.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிங்கப்பெண்ணே பாடல் சூப்பர். படமாக்கப்பட்ட விதமும் அருமை. இந்த பாடலில் ஒரு ஆச்சரியமும் இருக்கின்றது. அது என்ன என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். பின்னணி இசையில் ரஹ்மான் கலக்கியுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் ஃபைனல் கால்பந்தாட்ட போட்டியின்போது புகுந்து விளையாடியுள்ளார்.
விஷ்ணுவின் ஒளிப்பதிவு ஆச்சரியப்படும் வகையில் உள்ளது. குறிப்பாக கால்பந்து போட்டியின்போது வைக்கப்பட்ட கேமிரா கோணங்கள் மற்றும் ஆக்சன் காட்சிகளை சொல்லலாம். எடிட்டர் ரூபன் படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் தீபாவளி விடுமுறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் குடும்பத்துடன் சென்று ரசிக்கும் வகையில் ஒரு என்டர்டெயின்மென்ட் படமாக அட்லி கொடுத்துள்ளதால் இந்த படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் பார்க்கலாம். இரண்டாம் பாதி முழுக்க முழுக்க பெண்களுக்கான படம் என்பதால் பெண்கள் இந்த படத்தை நிச்சயம் விரும்புவார்கள்.
பிகில். விடுமுறையை கொண்டாட சரியான படம்.
Comments