எங்களுக்கு இது ஒண்ணுமட்டும் செய்யுங்க: ஒட்டுமொத்த திருநங்கைகளின் வலியை உணர்த்திய நமிதா!
- IndiaGlitz, [Friday,October 08 2021]
திருநங்கைகள் என்றாலே சமூகத்தில் பாலியல் தொழில் செய்பவர்களாகவும் பிச்சைக்காரர்களாக தான் பார்க்கிறார்கள் என்றும் எங்களுக்கு படிப்பு ஒன்றை மட்டும் கற்றுத் தாருங்கள் அது போதும் மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கண்ணீர் மல்க நமிதா மாரிமுத்து பேசியது மிகவும் உருக்கமாக இருந்தது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தற்போது தங்களுடைய சொந்த வாழ்க்கை கதையை கூறி வருகின்றனர் என்பதும், தாங்கள் சந்தித்த சவால்கள் துன்பங்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. அந்தவகையில் நேற்று நமிதா மாரிமுத்து கிட்டத்தட்ட அரைமணிநேரம் தனது வாழ்க்கை கதையை கண்ணீருடன் கூறினார்.
தனது பெற்றோர்கள் தன்னை ஒரு குறிப்பிட்ட வயதுவரை அன்புடனும் பாசத்துடனும் வளர்த்தார்கள் என்றும் ஆனால் தன்னுடைய உடலில் மாற்றம் ஏற்பட்டதை கண்ட உடன் தான் திருநங்கை என்பதை உணர்ந்தவுடன் அதே பெற்றோர்கள் தன்னை வெறுத்து ஒதுக்கி அடித்து துன்புறுத்தினார்கள் என்றும் கண்ணீருடன் தெரிவித்தார்.
ஒவ்வொரு திருநங்கையும் தவறான வழியில் செல்வதற்கு அவரது பெற்றோர்களே காரணம் என்றும் பெற்றோர்கள் திருநங்கைகளின் வலியை உணர்ந்து, அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு படிக்க மட்டும் வைத்தால் போதும் என்றும் அதன்பிறகு அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை பார்த்துக் கொள்வார்கள் என்றும் கண்ணீருடன் கூறினார்.
ஒவ்வொரு திருநங்கைகளும் மிகப்பெரிய வலியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் இப்பொழுதுதான் திருநங்கைகளுக்கு ஓரளவுக்கு சமூகத்தில் அந்தஸ்து கிடைத்துள்ளது என்றும் ஒவ்வொரு துறையிலும் 100 திருநங்கைகளாவது நாங்கள் விரைவில் வருவோம் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் பேசிய போட்டியாளர்களின் பேச்சை எடிட் செய்து முக்கியமானவற்றை மட்டும் ஒளிபரப்பிய விஜய் டிவி, நமீதா மாரிமுத்து பேசியதை முழுவதுமாக ஒளிபரப்பியதை அடுத்து திருநங்கைகளின் ஒட்டுமொத்த வலியை அனைவரும் உணரும் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.