அனிதாவுக்கு என்னைவிட களிமண் அதிகம்: சுரேஷ் சக்கரவர்த்தி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த சுரேஷ் சக்கரவர்த்தி சமீபத்தில் எவிக்ட் ஆன நிலையில் தற்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில் அனிதாவுக்கு என்னைவிட மண்டையில் களிமண் அதிகம் என்று கூறியுள்ளார்.

ஆயுதபூஜை அன்று நடந்த டாஸ்க்கில் தான் சொன்னது தவறுதான் என்றும், அது அனிதா கூறியபோது எனக்கு புரியாவிட்டாலும் கமல்ஹாசன் அவர்கள் சொன்னதும் எனக்கு புரிந்துவிட்டது என்றும் கூறிய சுரேஷ், அதன்பின்னர் சுசித்ரா, அனிதாவிடம் என்னை மன்னிப்பு கேட்க சொன்னார்.

வெறுமனே மன்னிப்பு கேட்க சொன்னால் நான் மன்னிப்பு கேட்டிருப்பேன். ஆனால் உங்களைவிட அனிதாவுக்கு அறிவு அதிகம் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள் என்று சுசி கூறியபோது, ‘எனக்கு அறிவு எல்லாம் கிடையாது, என் மண்டையில் களிமண் தான் இருக்கு, அப்படிப்பார்த்தால் என் மண்டையில் உள்ளதை விட அனிதா மண்டையில் அதிகம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்’ என்று கூறினேன். நான் என்ன கூறினேன் என்பதை அப்போதுகூட அனிதா புரிந்து கொள்ளவில்லை என்றால் அதற்கு நான் எப்படி பொறுப்பு’ என்று கிண்டலுடன் கூறினார்.

மேலும் ‘எனக்கும் அனிதாவுக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை. அனிதா பேசுவதும், காரணம் இல்லாமல் கோபிப்பதும், நாம் சொல்ல வந்ததை புரிந்து கொள்ளாமல் அதற்கு வேறு காரணங்கள் கற்பிப்பதும் எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்று வஞ்சப்புகழ்ச்சியில் மீண்டும் அனிதாவை கிண்டல் செய்தார்.