தொடரும் அர்ச்சனாவின் நாட்டாமைத்தனம், சீண்டும் பாலாஜி: பிக்பாஸ் பரபரப்புகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்த போது பிக்பாஸ் வீடே கலகலப்பாக மாறியது உண்மைதான். ஆனால் ஓரிரண்டு நாட்களில் அர்ச்சனா தானும் 16 போட்டியாளர்களில் ஒருவர் என்பதை மறந்துவிட்டு 15 போட்டியாளர்களுக்கும் தலைவி போல் நடந்து கொண்டிருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வார கேப்டன் யார் என்றே தெரியாத அளவிற்கு அவருடைய பெயர் மறைந்துபோய் முழுக்க முழுக்க அர்ச்சனாவே அனைவரையும் வழி நடத்தி வருகிறார் என்பதும் தேவை இல்லாத விசயத்திற்கு மூக்கை நுழைக்கிறார் என்றும் பார்வையாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக நேற்று 1 முதல் 16 வரையிலான போட்டியாளர்கள் வரிசைப்படுத்தும் டாஸ்க்கில் அர்ச்சனாவின் கையே ஓங்கியிருந்தது. யார்-யார் எந்த எந்த இடங்களில் நிற்க வேண்டும் என்பதை கிட்டத்தட்ட அவர்தான் கூறிவந்தார். தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வழங்கி பழக்கப்பட்ட அவர், பிக்பாஸ் வீட்டிலும் அதே வேலையை செய்து வருவதால் பார்வையாளர்களுக்கு அர்ச்சனா மீது சற்று அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
அர்ச்சனாவின் இந்த செய்கை சுரேஷ் உள்பட பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தினாலும் அனைவரும் அமைதி காத்து வருகின்றனர். ஆனால் பாலாஜி மட்டும் அர்ச்சனாவை நேருக்கு நேர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அர்ச்சனாவின் ஒருதலைபட்சத்தை வெளிப்படையாக சுட்டிக்காட்டிய பாலாஜி, வரிசைப்படுத்துதல் டாஸ்க்கில் போட்டியாளர்களை ஆர்டர் மாற்றி தேர்வு செய்த போதும் குறுக்கிட்டார். அர்ச்சனா இதனை எதிர்பார்க்கவில்லை என்றாலும் ஓரளவு நிலைமையை சமாளித்தார். மொத்தத்தில் இருவருக்கும் விரைவில் மோதல் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய நிகழ்ச்சியில் ஜித்தன் ரமேஷ் பிறந்தநாள் கொண்டாடிய போது, அவருடைய சகோதரர் ஜீவா வாழ்த்து சொன்னது நேற்றைய நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாகும். அதேபோல் பிறந்தநாள் வாழ்த்து நிகழ்ச்சியில் ஆஜீத் திடீரென ஒரு பாடலைப் பாடி அசத்தியது, நானும் இந்த போட்டியில் இருக்கிறேன் என்று முதல் முறையாக நிரூபித்துள்ளார்.
அதேபோல் 1 முதல் 16 வரையிலான வரிசைப்படுத்துதல் டாஸ்க்கில் ரம்யா முதலிடத்தை பிடித்தது யாருக்கும் எந்தவிதமான ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 16 பேர்களில் புத்திசாலித்தனமாகவும் சமயோசிதமாகவும் விளையாடி வருகிறார். சுரேஷூக்கே சவால் விடும் போட்டியாளர் என்றால் அவர் ஒருவர்தான். எனவே அவர் முதல் இடத்திற்கு தகுதியானவர்தான். ஆனால் ஷிவானிக்கு இரண்டாவது இடம்தான் கிடைத்தது தான் மிகப்பெரிய ஆச்சரியமாக உள்ளது. அவர் என்ன செய்துவிட்டார் என்று அவருக்கு இரண்டாம் இடம் கொடுத்துள்ளார்கள், எந்த அடிப்படையில் அவர் இரண்டாவது இடத்துக்கு அனைவராலும் தேர்வு செய்யப்பட்டார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
மொத்தத்தில் நேற்றைய நிகழ்ச்சி, மற்ற நான்கு நாட்களை விட சுவாரஸ்யமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று கமல் வரும் நாள் என்பதால் இந்த வாரத்து பஞ்சாயத்துக்கள் அவர் முன் பேசி தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments