சரவணனை திடீரென வெளியேற்றிய பிக்பாஸ் முடிவு சரியா?
- IndiaGlitz, [Tuesday,August 06 2019]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று எவிக்சன் படலம் மற்றும் டாஸ்க் ஆகியவை ஜாலியாக சென்று கொண்டிருந்த நிலையில், நிகழ்ச்சியின் முடிவில் திடீரென சரவணன் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் மீரா மற்றும் சேரன் பிரச்சனையின் போது சரவணன் ஜாலியாக ஒரு கருத்தைக் கூறினார். தானும் பேருந்தில் செல்லும்போது பெண்களை இடித்திருப்பதாக தெரிவித்தார். அவர் கூறிய இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் பிரச்சினைக்கு உரியதாக பார்க்கப்பட்டது. பெண்களை அவமதிக்கும் வகையில் சரவணன் நடந்து கொண்டிருப்பதாக பலர் கருத்து தெரிவித்தனர். ஆனாலும் சரவணன் தான் இவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கேட்ட பின்னர் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது. பார்வையாளர்களும் கிட்டத்தட்ட இந்த விஷயத்தை மறந்துவிட்டனர்.
இந்த நிலையில் தற்போது திடீரென அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண்களை கண்ணியக்குறைவாக நடத்துவதை சகித்துக்கொள்ள முடியாது என்பதால் சரவணன் என்ற நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபடும் முடிவை பிக்பாஸ் குழுவினர் எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. தன்னுடைய செயலுக்கு மன்னிப்புக் கேட்ட போதும் சரவணன் மீது நடவடிக்கை எடுத்திருப்பது, அதுவும் காலதாமதமாக நடவடிக்கை எடுத்திருப்பது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. கல்லூரி காலத்தில் ஜாலியாக செய்ததாக கூறிய ஒரு விஷயத்தை சீரியசாக எடுத்துக்கொண்டு பிக்பாஸ் குழுவினர் சரவணனை வெளியேற்றி இருப்பது சரியா என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த முடிவை உடனடியாக ஏன் பிக்பாஸ் குழுவினர் எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களை கண்ணியக்குறைவாக நடத்துவதை சகித்துக்கொள்ள முடியாது என்று கூறும் பிக்பாஸ் குழுவினர், ஒரே நேரத்தில் நான்கு பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம் என்பதற்காகத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன் என்று கூறுபவரை எப்படி அனுமதிக்கிறது என்பது தெரியவில்லை. காதல் என்ற பெயரில் நடக்கும் கூத்துக்கள் மற்றும் பிக்பாஸ் பெண் போட்டியாளர்கள் அணியும் உடைகள் எல்லாம் பெண்களை கண்ணியத்துக்குரிய வகையில் நடத்தும் நிகழ்வுகளா? என்பதற்கும் பிக்பாஸ் குழுவினர் பதில் சொல்லியாக வேண்டும்.
சரவணன் கூறியதை கமல்ஹாசனே அவ்வளவு சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. விளையாட்டாகத்தான் எடுத்துக்கொண்டார். பார்வையாளர்களும் சரவணன் கூறியபோது கைதட்டினார். அவ்வாறு இருக்கையில் இரண்டு வாரம் கழித்து திடீரென சரவணன் மீது நடவடிக்கை எடுத்திருப்பதில் ஏதேனும் உள்குத்து உள்ளதா? சரவணன் உண்மையில் வெளியேற்றப்பட்டாரா? அல்லது ரகசிய அறையில் வைக்கப்பட்டாரா? போன்ற பல கேள்விகளுக்கு வரும் நாட்களில் விடை தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.