என்னை 8 பேர் சேர்ந்து 'கேங் ராக்கிங்' செய்தார்கள்: மதுமிதா பேட்டி
- IndiaGlitz, [Monday,September 09 2019]
பிக்பாஸ் விதிமுறைகளை மீறியதால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா, இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் டாஸ்க் ஒன்றில் ஒவ்வொருவரும் அவரவர் கருத்தை கூறி வந்த நிலையில் என்னுடைய சமூக கருத்தாக, 'வருண பகவானும் கர்நாடகத்தை சேர்ந்தவரோ..? மழை வடிவில் கூட தமிழகத்திற்கு தண்ணீரை தர மறுக்கிறார் என்ற ஒருவரிக் கவிதையை கூறினேன். ஆனால் இதனை அரசியலாக்கி வேறு கோணத்தில் கொண்டுசென்று என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டார்கள். இதில் எங்கே அரசியல் இருக்கின்றது என்பது எனக்கு புரியவில்லை.
நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியாத நிலைக்கு என்னை அங்கிருந்த சிலர் கொண்டு சென்றுவிட்டனர். நம் ஊரில் உள்ள பிரச்னையை பேசும்போது நம்மூரை சேர்ந்தவர்களும் சேர்ந்து என்னை கேங் ராக்கிங் செய்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமாக இருந்ததால் எனக்கு கிடைத்த பரிசுதான் நான் வெளியேற்றப்பட்டது.
தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை தீர வேண்டும் என்று தினமும் கடவுளை வேண்டும். அவ்வாறே எனது வேண்டுதலை கவிதை வடிவில் தெரிவித்தேன். அதில் அரசியல் எதுவும் இல்லை. பிக்பாஸ் வீட்டில் அரசியல் பேசக்கூடாது என்று எனக்கு குறிப்பு வந்தவுடன் 8 பேர் சேர்ந்து என்னை கேலியும் கிண்டலும் செய்தனர். அவர்களது கேலியையும் கிண்டலையும் பொறுக்க முடியாமல் தான் கையை அறுத்து கொண்டேன். எனக்கு ஆறுதலாக இருந்தது சேரனும் கஸ்தூரியும் தான்.
எனக்கு முன்னர் பிக்பாஸ் வீட்டில் பலர் அரசியல் பேசியுள்ளார்கள். ஏன் கமல் சாரே பிக்பாஸ் மேடையை பலமுறை அரசியலுக்கு பயன்படுத்தினார். ஆனால் அப்போதெல்லாம் அரசியல் பேசக்கூடாது என்று பிக்பாஸிடம் இருந்து குறிப்பு வரவில்லை. நான் பேசியது அரசியலே அல்ல, அவ்வாறு இருக்கும் போது எனக்கு அனுப்பிய குறிப்பை ஏன் மற்றவர்களுக்கு அனுப்பவில்லை என்பதே எனது கேள்வி' என்றும் மதுமிதா கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.