சேரனை நாமினேட் செய்துவிட்டு கதறி அழும் லாஸ்லியா!

பிக்பாஸ் வீட்டில் சேரனும், லாஸ்லியாவும் ஆரம்பத்தில் இருந்து தந்தை-மகள் என நெருக்கமாக இருந்து வந்த நிலையில் கடந்த வார டாஸ்க்கில் லாஸ்லியா சரியாக நடிக்கவில்லை என சேரன் கூறியது லாஸ்லியாவை ரொம்பவே காயப்படுத்திவிட்டது. ஒரு தந்தையாக தான் லாஸ்லியா மீது அன்பு செலுத்தினாலும், ஒரு நேர்மையாளராக தான் நடந்து கொண்டதாகவும் சேரன் நேற்று கமலிடம் இதுகுறித்து விளக்கம் அளித்தார். கமல்ஹாசனே கொலை செய்த மகளை காப்பாற்ற 'பாபநாசம்' படத்தில் எவ்வளவு ரிஸ்க் எடுத்தவர் என்பது சேரனுக்கு தெரியாதா? மகளாக இருந்தாலும் லாஸ்லியாவிடம் அவரது குறையை தனியாக தெரிவித்துவிட்டு, சபையில் லாஸ்லியாவுக்கு சேரன் சப்போர்ட் செய்திருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

சேரன் தன்னிலை விளக்கம் அளித்தும், லாஸ்லியாவை சமாதானப்படுத்தியும் லாஸ்லியா இன்று சேரனை நாமினேட் செய்தார். இது பார்வையாளர்களுக்கு எந்தவித ஆச்சரியத்தையும் தரவில்லை. பிக்பாஸ் என்பது ஒரு கேம் ஷோ. இதில் தந்தை, மகள், அண்ணன், தம்பி என்ற உறவுகளுக்கு இடமில்லை என்பதால் லாஸ்லியா தன்னுடைய வெற்றியை கவனத்தில் கொண்டு நடந்து கொண்டதாகவே பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேரனை நாமினேஷன் செய்தது தவறோ என்ற எண்ணத்தில் கவினிடமும் , தர்ஷனிடமும் லாஸ்லியா சொல்லி அழுவது போன்று இன்றைய அடுத்த புரமோ வீடியோவில் உள்ளது. ஒரு முடிவை எடுத்த பின்னர் அந்த முடிவை ஆராய்வது தேவையில்ல்லாதது என்று எடுத்து கூற பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவுக்கு ஆள் இல்லை என்பது ஒரு குறையாகவே உள்ளது. மொத்தத்தில் பிக்பாஸ் வீட்டில் ஜெயிக்கப்போவது பாசமா? போட்டியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்