சரவணன் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று சரவணன் திடீரென அதிரடியாக வெளியேற்றப்பட்டது சக போட்டியாளர்களுக்கு மட்டுமன்றி பார்வையாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியாக இருந்தது

இரண்டு வாரங்களுக்கு முன் கமல்ஹாசனுடன் பேசியபோது கல்லூரி காலத்தில் தான் செய்த செயல் ஒன்றை விளையாட்டாக, ஜாலியாக சரவணன் கூறியதற்காக ஏற்கனவே அவர் மன்னிப்பு கேட்டு விட்டார். அந்த மன்னிப்பும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் திடீரென அதே காரணத்திற்காக வீட்டை விட்டு வெளியேற்றும் மிகப்பெரிய தண்டனை அளித்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

சரவணனை வெளியேற்ற உண்மையிலேயே அதுதான் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்பது குறித்து சமூக வலைதள பயனாளிகள் விவாதம் செய்து வருகின்றனர். சேரனை அவமதித்ததற்காக திரையுலகினர் பொங்கி எழுந்து உள்ளதால் திரையுலகின்ர்களை சமாதானப்படுத்த சரவணன் வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என்று ஒருசிலர் கூறி வருகின்றனர்

இன்னொரு தரப்பினர் கடந்த சனிக்கிழமை அன்று கமல்ஹாசன் பேசிக்கொண்டிருக்கும்போது சரவணன் கூறிய ஒரு வார்த்தை தான் அவர் வெளியேற காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். அதாவது ஆள் மாறி கேள்வி கேட்கும் டாஸ்க் ஒன்றை கமல்ஹாசன் நடத்தியபோது கமலஹாசன் லாஸ்லியாவிடம் டாஸ்க் குறித்து விலக்கி கொண்டிருந்தார். அப்போது சரவணன் மிக மெதுவான குரலில் 'கோர்த்து விட்றாண்டா' என்று கூறியது ஒருசிலருக்கு மட்டும் கேட்டது. இதனை மற்ற போட்டியாளர்கள் சரியாக கவனிக்க வில்லை என்றாலும் கமல்ஹாசன் நிச்சயம் கவனித்திருப்பார். நிகழ்ச்சி முடிந்த பிறகு தனது எதிர்ப்பை அவர் பிக்பாஸ் குழுவினரிடம் தெரிவித்திருப்பார் என்றும், கமலஹாசனை திருப்திப்படுத்தவே வேறு வழி இன்றி சரவணனை பிக்பாஸ் குழுவினர் வெளியேற்றி இருக்கலாம் என்றும், ஆனால் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் கமல்ஹாசன் இமேஜ் பாதிக்கப்படும் என்பதால் பழைய காரணம் ஒன்றை வெளியேற்ற கையில் எடுத்துள்ளதாகவும் சமூக வலைதள பயனாளிகள் பதிவு செய்து வருகின்றனர்

சரவணன் வெளியேற்றத்திற்கான உண்மையான காரணம் கடைசி வரை வெளியே வரப்போவதில்லை. ஆனால் திடீரென பெண்கள் மீது அதிக அக்கறை அந்த சேனலுக்கு வந்ததுதான் வியப்பை அளிக்கிறது. பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்கள் அணியும் உடைகள் மற்றும் காதல் நாடகங்கள் ஆகியவற்றில் வராத பெண்களுக்கான அவமரியாதை, சரவணன் ஜாலியாக பேசியதில் மட்டும் வந்து விட்டதா? என்பதுதான் தற்போதைய அனைவரின் கேள்வியாக உள்ளது