பிக்பாஸ் சீசன் 6: இந்த ஐந்து போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டார்களா?

  • IndiaGlitz, [Tuesday,July 19 2022]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி வரும் வாரத்துடன் முடிவடைய உள்ளதால் வெகுவிரைவில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது 5 பேர் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விஜய் டிவி வட்டாரங்களில் இருந்து செய்தி கசிந்துள்ளது.

முதலாவதாக குக் வித் கோமாளி உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் ரக்சன் போட்டியாளர்களில் ஒருவர் என கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இவர் ஒரு திரைப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அடுத்ததாக இசையமைப்பாளர் டி இமானின் முன்னாள் மனைவி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவது கிட்டத்தட்ட உறுதி என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் விஜய் டிவி தயாரிப்புகளில் ஒருவரான சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் செந்தில் மனைவி ராஜலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி சுசித்திராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி என்கிற திவ்யதர்ஷினி பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்குவார் என்று தெரிகிறது. அதே போல் சில தொலைக்காட்சி பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த செய்திகள் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.