24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்.. கண்ணீருடன் விடை பெற்றார்..!

  • IndiaGlitz, [Monday,October 07 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில், 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த போட்டியாளர் கண்ணீருடன் வெளியேறியது பார்வையாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழு சீசன்களிலும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் கழித்தே முதல் எலிமினேஷன் நடக்கும் என்ற நிலையில், இந்த சீசனில் 24 மணி நேரத்தில் ஒரு எலிமினேஷன் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாமினேஷன் படலம் தொடங்கிய நிலையில், அதிக நபர்கள் நாமினேஷன் செய்யப்பட்டதன் அடிப்படையில் சாச்சனா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார் என்று பிக் பாஸ் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, சாச்சனா மிகவும் வருத்தத்துடன், கண்ணீருடன் தனது பிக் பாஸ் சின்னத்தையும் உடைத்து விட்டு வெளியேறினார். அவரது வெளியேற்றம் சக போட்டியாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய நிகழ்ச்சிகளில், இரண்டாவது போட்டியாளராக உள்ளே நுழைந்த சாச்சனா, தனது அம்மாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்றும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றும் கூறியிருந்தார். அவருடைய பெர்பார்மன்ஸை காணும் முன்பே அவரை வெளியேற்றியது மிகப்பெரிய அநியாயம் என்று பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.