இறந்து போன அம்மா குறித்து பாலா பேசியது என்ன?
- IndiaGlitz, [Monday,December 14 2020]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் பாலாஜி முருகதாஸ் மிகவும் சிறப்பாக தற்போது விளையாடி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார். 70 நாட்களை கடந்தும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் பாலாஜி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார் என்றே கணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தனது தாய் மற்றும் தந்தை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாலாஜி பேசியிருந்தார். குறிப்பாக தாய், தந்தை இருவரும் போதைக்கு அடிமையானவர்கள் என்று அவர் கூறியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாலாஜி பேட்டி அளித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் தனது தாயார் இறந்தது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் அந்த வீடியோவில் கூறியதாவது: நான்தான் முதல் முதலாக தமிழ்நாட்டில் இருந்து 2018ல் மிஸ்டர் இந்தியா பட்டம் பெற்றேன். இந்தியாவில் இருந்து 2019 இல் மிஸ்டர் இண்டர்நேஷனல் பட்டத்திற்கான போட்டியில் நான் கலந்துகொண்டேன். அதுவும் என்னுடைய அம்மா இறந்த ஒரு வாரத்திலேயே அந்த போட்டியில் நான் கலந்து கொண்டேன். ஏனெனில் எனக்கு மாடலிங் தொழில் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது’ என்று கூறியுள்ளார். இந்த பேட்டியின் மூலம் அவரது அம்மா கடந்து 2019 ஆம் ஆண்டிலேயே இறந்து விட்டார் என தெரிகிறது. ஆனால் பிக்பாஸ் வீட்டில் பாலாஜி இருந்த இந்த 70 நாட்களில் அவர் தனது தாயார் இறந்தது குறித்து கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் இந்த பேட்டியில் ’மாடலிங் துறையில் என்னுடைய டைட்டில் பட்டத்தை வேறொருவர் எடுத்துக்கொண்டு தவறாக இளைஞர்களை வழி நடத்தி வருகிறார் என்றும் மாடலிங் துறையை அவர் கேவலப்படுத்தி வருகிறார் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார். அதுபோன்ற தவறான நபர்களை பேட்டி எடுத்து தவறான செய்திகளை வெளியிட வேண்டாமென ஊடகங்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.