கமல்ஹாசனின் கண்டிப்பு ஆரம்பம்: பதறும் பங்கேற்பாளர்கள்
- IndiaGlitz, [Sunday,August 06 2017]
உலக நாயகன் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்ற அறிவிப்பு வந்தவுடன் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு எகிறது. எதிர்பார்ப்பின்படியே நிகழ்ச்சியை கமல்ஹாசன் சரியாக நடத்தி வந்தாலும் கடந்த சில வாரங்களாக அவர், தவறு செய்யும் பங்கேற்பாளர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது
சல்மான்கான் நடத்திய பிக்பாஸ்-ஐ ஒப்பிடும்போது கமல் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவே அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. கமல்ஹாசனின் டுவிட்டர் பக்கத்திற்கே சென்று ஓவியா ஆர்மியினர் அவரை விமர்சனம் செய்ததால் , கமல்ஹாசன் தன்னுடைய நடுநிலையை நிருபிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
நேற்றைய நிகழ்ச்சியில் அவர் நடந்து கொண்ட விதம் அதைத்தான் காட்டியது. மனநலம் குன்றியவர்களை கிண்டல் செய்யும் வகையில் கொடுத்த டாஸ்க்கிற்கு பிக்பாஸ் நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தி தெரிவித்த கமல், இனிமேலும் இது தொடர்ந்தால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறவும் தயங்க மாட்டேன் என்று எச்சரிக்கும் வகையில் கூறியது கமல்ஹாசனின் கண்டிப்பு கலந்த நேர்மையையும் சமுதாய அக்கறையையும் வெளிப்படுத்தியது.
கணேஷ், ரைசா ஆகியோர்களை தனியாக அழைத்து கமல் கேட்ட கண்டிப்பான கேள்விகளும், அவர்கள் கூறிய பதிலின்போது இடைமறித்து கேட்ட குறுக்கு கேள்விகளும் கமல் ஃபார்முக்கு வந்துவிட்டார் என்பதை உறுதி செய்தது. எனவே இனிவரும் நாட்களில் கமல் ஒரு கண்டிப்பான ஆசிரியர் போல் தொடர்வார் என்று நம்பப்படுவதால் பங்கேற்பாளர்கள் பதட்ட நிலையை அடைய நேரிடும் நிலை ஏற்படும் என்றே தெரிகிறது.