விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம்: மக்களுக்கு சினேகன் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Tuesday,October 03 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக கவிஞர் சினேகன் தான் தேர்வு செய்யப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஆரவ் எப்படி வெற்றி பெற்றார் என்பது புரியாத புதிராக உள்ளது. இந்த நிலையில் தனக்கு தோல்வி சகஜம் என்றும், தன்னுடைய தோல்வியால் ஆத்திரமடைந்து எந்தவித விபரீத செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு சினேகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

பிக்பாஸ் வீட்டில் இருந்த 100 நாட்களிலும் எனக்கு வாக்களித்து ஆதரவு கொடுத்த உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களுக்கு எனது நன்றிகள். இந்த அன்பை எனது வாழ்நாள் முழுவதும் நான் மறக்க மாட்டேன்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் என் மீதான விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் மற்றும் அன்பின் மிகுதியால் செய்த பதிவுகள் ஆகியவற்றை படித்து பார்த்தேன். என் மீதான குற்றச்சாட்டுக்களில் ஒன்று நான் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு அழுவதாக கூறியிருந்தார்கள். நான் கிராமத்துகாரன். எனக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைக்காது. அழுகை மூலம் தான் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறேன். 

என் மீதான அடுத்த குற்றச்சாட்டு நான் அடிக்கடி பெண்களை கட்டிப்பிடிப்பது. ஒரு பெண்ணை தொடுவதற்கே அந்த பெண்ணின் நம்பிக்கையும் சம்மதம் வேண்டும். என் மீது அந்த வீட்டில் உள்ள பெண்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தால் என்னை கட்டிபிடிக்க சம்மதித்து இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். என்னை கட்டிபிடிப்பதால் ஆறுதல் கிடைக்கும் என்று அவர்கள் நம்புவதே இதற்கு காரணம்

மேலும் நான் தோல்வி அடைந்ததால் ஒருசிலர் ஆத்திரப்பட்டு பஸ்மறியல் செய்ததாகவும், டிவியை உடைத்ததாகவும் கேள்விப்பட்டேன். என் மீது இந்த அளவுக்கு அன்பு செலுத்தும் அளவுக்கு இந்த கிராமத்துக்காரன் என்ன செய்தேன் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக உள்ளது. அதே சமயம் வெற்றி அடைந்தவர் என் குடும்பத்தின் சகோதரர் தான். ஆரவ் என்னுடைய தம்பி. எனவே யாரும் ஆத்திரப்பட்டோ, உணர்ச்சிவசப்பட்டோ, எந்தவித விபரீத செயல்களிலும் ஈடுபட வேண்டாம்.

இவ்வாறு சினேகன் தனது வீடியோ செய்தியில் கூறியிருந்தார்