அமெரிக்காவின் 46 ஆவது அதிபரானார் ஜோ பிடன்… கையெழுத்திட்ட முக்கிய ஆணைகள் எவை?
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த ஜோ பிடன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்றுக் கொண்டதும் பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டார். அதில் ஒன்றுதான் பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்க இணைய இசைவு அளிக்கும் ஆணை. இது டிரம்பின் கொள்கைக்கு முற்றிலும் மாறானது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கையெழுத்திட்ட ஆவணங்களின் எண்ணிக்கையும் மற்ற அதிபர்களை விட அதிகமாக இருந்தது. அதில் நிர்வாக ஆணைகள் 15, அதிபரின் குறிப்புகள் எனப்படும் பிரசிடென்ஷியல் மெமோக்கள்-2 ஆகியவை அடங்கும்
இதற்கு முன் அமெரிக்க அதிபராக பதவி வகித்த டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றுக்கொண்ட முதல் நாள் 8 ஆணைகளில் கையெழுத்து இட்டார். அவருக்கு முன்னதாக பதவி வகித்த பாரக் ஒபாமா 9 ஆணைகளிலும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் 2 ஆணைகளிலும் கிளிண்டன் 3 ஆணைகளிலும் கையெழுத்து இட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜோ பிடன் தான் பதவி ஏற்றுக்கொண்ட முதல் நாளே இத்தனை ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டு இருப்பது கருத்து தெரிவித்த சில அரசியல் நிபுணர்கள், அவர் டிரம்பின் ஆட்சிக் காலக் கொள்கைகளில் மாற்றம் கொண்டுவருவது குறித்து காலதாமதம் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் என்றும் கருத்துத் தெரிவித்தனர். அந்த வகையில் அவர் கையெழுதிட்ட முதல் ஆணையே பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைய இசைவு அளிக்கும் ஒப்பந்தமாக இருந்தது.
புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் கடந்த 2015 டிசம்பர் 12 ஆம் தேதி உலகின் 196 நாடுகள் இணைந்து பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டன. ஆனால் டிரம்ப் பதவி ஏற்றுக்கொண்டதும் இந்த கொள்கையில் இருந்து அமெரிக்க விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார். தற்போது அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவி ஏற்றிருக்கும் ஜோ பிடன் மீண்டும் அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்தில் இணையும் என்பதற்கான ஆணையில் கையெழுத்திட்டு இருக்கிறார்.
மேலும் குறிப்பிட்ட முஸ்லீம் நாடுகளில் இருந்து வருவோருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் (அமெரிக்காவிற்குள் குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்கும் மசோதா), அதிகமான கிரீன் கார்டு (இதன்மூலம் இந்தியா போன்ற நாடுகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு ஐடி துறையில் வேலைவாய்ப்பு மற்றும் அதிகமான விசா வழங்கல்), 100 நாட்கள் கட்டாய முகக்கவசம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார வசதி, அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளை திரும்பப் பெறுதல் (உலகச் சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகியது, உலகச் சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா இதுவரை வழங்கி வந்த நிதியுதவியை நிறுத்தியது), மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்குள் அகதிகள் நுழையாத வகையில் டிரம்ப் ஆட்சியில் சுவர் எழுப்ப ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி உடனடியாக ரத்து செய்யப்படும், அமெரிக்காவில் உள்ள அனைத்து பிரிவு மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டார்.
அதிபர் ஜோ பிடன் தனது மனைவி ஜில் பிடனுடன் இணைந்து பதவி ஏற்பதற்காக வெள்ளை மாளிகைக்கு சென்றபோது அவருக்கு வழியில் பல்லாயிரக் கணக்கான மக்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். வெள்ளை மாளிகைக்கு செல்லும் முன் சிறிது தூரத்திலேயே காரை விட்டு இறங்கிய ஜோ பிடன் மக்களை சந்தித்து அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றபின்பே பதவி ஏற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments