இந்திய பிரதமரே எச்சரிக்கும் “கோஸ்ட் மிளகாய்”… அப்படியென்ன ஸ்பெஷல்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு மிளகாய் வெரைட்டி குறித்து எச்சரித்ததோடு “இதைச் சாப்பிட்டவர்களுக்குத் தான் தெரியும் அதன் காரம்“ எனவும் கூறி இருக்கிறார். இதனால் அந்த மிளகாய் வெரைட்டி குறித்த ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது.

நாகலாந்து மாநிலத்தில் விளையும் “பூத் ஜோலோகியா” எனும் மிளகாயை பார்த்து பலரும் பயந்து நடுங்குகின்றனர். காரணம் இதன் பெயரே பேய் மிளகாய். அதோடு இந்த மிளகாயைச் சாப்பிடும்போது ஒருவரது உடம்பில் பேய்ப்பிடித்தால் எப்படி இருக்குமோ? அப்படி கிறுகிறுத்துப் போய்விடுவார்களாம். அதனால் இந்த மிளகாயை “கிங் மிர்ச்சா“ அல்லது “கோஸ்ட் மிர்ச்சா“ என அழைக்கின்றனர்.

உலகிலேயே அதிகக் காரமான மிளகாய் வகைகளில் இந்த பூத் ஜோலோகியாவும் ஒன்று. இந்த மிளகாயை சாப்பிட்ட ஒரு அமெரிக்கர் தன்னுடைய நெஞ்சில் வலி ஏற்பட்டு தரையில் விழுந்து உருண்ட சம்பவத்தை இன்றைக்கும் நாகலாந்து மக்கள் பேசிக்கொண்டு இருக்கின்றனர். மேலும் அந்த அமெரிக்கரின் உணவுக் குடலில் ஒரு அங்குலம் அளவிற்கு இந்த மிளகாயின் துகள்கள் எடுக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து The journal of emergeny Medicine நாளிதழ் கட்டுரை வெளியிட்டதோடு பூத் ஜோலோகியா மிளகாயின் காரத்தன்மை அதிகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறது. இதனால்தான் பூத் ஜோலோகியா மிளகாயை “கோஸ்ட் மிளகாய்“ என்றும் அழைக்கின்றனர்.

இந்த மிளகாய் தற்போது லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது. அதோடு இந்த மிளகாய் தூள் வடிவில் லண்டனில் விற்கப்பட இருக்கிறது. இதற்காகத்தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் எச்சரித்து டிவிட் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவா மிளகாயை இந்தியாவிற்கு போர்ச்சுகீசியர்களே அறிமுகப்படுத்தியதாக வரலாற்றுத் தகவல் கூறப்படுகிறது. ஆனால் நாகலாந்தில் விளையும் இந்த பூத் ஜோலோகியா மிளகாய் வகை அதற்கு முன்பே இந்தியாவில் இருந்திருக்க வேண்டும் என்று தாவரவியல் நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.

இத்தனை கொடூரமான மிளகாய், உலகிலேயே அதிக காரமான 5 மிளகாய் வகைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் இதன் காரத்தன்மை 1 மில்லியன் SHU என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. நினைத்துப் பாருங்கள் இத்தனை காரம் கொண்ட பேய் மிளகாயை சாப்பிட்டால் நம்முடைய குடல் என்னவாகும்? இதை நினைத்துத்தான் நெட்டிசன்கள் தற்போது பதற்றம் வெளியிட்டு வருகின்றனர்.