'பூலோகம்' திரைவிமர்சனம். ஜெயம் ரவியின் பலமான பஞ்ச்
- IndiaGlitz, [Friday,December 25 2015]
ரோமியோ ஜூலியட், சகலகலா வல்லவன், தனி ஒருவன் என தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த ஜெயம் ரவிக்கு 2015-ல் வெளியாகும் 4வது படம். நீண்ட இடைவெளிக்கு பின் வெளிவதாலும் வெற்றிப்படமாக அமையுமா? என்பதை பார்ப்போம்.
பல ஆண்டுகளுக்கு முன் இரண்டு பரம்பரை வீரர்கள் பாக்ஸிங் சண்டையில் மோதுகின்றனர். இந்த சண்டையில் ஜெயம் ரவியின் அப்பா தோல்வி அடைவதால் அவமானம் தாங்காமல் தூக்கில் தொங்குகிறார். அப்போது சிறுவனாக இருக்கும் ஜெயம் ரவி, தன்னுடைய தந்தைக்கு காரணமாக இருந்த எதிரியின் மகன் ஆறுமுகத்தை இதே பாக்ஸில் சண்டையில் கொல்வேன் என சவால் விடுகிறார்.
நாட்டுவாத்தியார் பொன்வண்ணனின் பயிற்சியோடு சிறுவயதில் இருந்தே பாக்ஸிங் பயிற்சி பெறும் ஜெயம் ரவி, ஆறுமுகத்துடன் மோதும் நாளும் வருகிறது. இந்த இமோஷனான போட்டியை டிவியில் ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கும் திட்டத்துடன் நுழைகிறார் பிரகாஷ்ராஜ். எதிர்பார்த்ததுபோலவே இந்த போட்டியில் ஜெயம் ரவி வெற்றி பெறுகிறார். ஆனால் தோல்வியடைந்த ஆறுமுகத்தின் உயிர் ஊசலாடுகிறது. ஆறுமுகத்தின் மகன் தன்னுடைய தந்தையின் நிலை குறித்து கதறுவதை பார்த்த ஜெயம் ரவிக்கு, தான் சிறுவயதில் இருந்த அதே நிலை ஞாபகத்துக்கு வருகிறது. இந்த பரம்பரை பகையை முடித்து வைக்க முடிவு செய்யும் ஜெயம் ரவி, இனிமேல் பாக்ஸிங் சண்டையே போடமாட்டேன் என்று கூறு ஆறுமுகத்தின் சிகிச்சைக்கு பணம் கொடுத்து உதவுகிறார்.
இந்நிலையில் ஜெயம் ரவியை காதலிக்கு த்ரிஷா, தன்னுடைய கல்லூரி கேண்டினில் வேலை வாங்கி தருகிறார். ஜெயம் ரவியின் பகையை பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த பிரகாஷ்ராஜூக்கு ஜெயம் ரவியின் முடிவு அதிர்ச்சி தருகிறது. அடுத்தடுத்து ஜெயம் ரவியின் குத்து சண்டையை வைத்து பணம் பண்ண நினைத்த பிரகாஷ்ராஜ், மீண்டும் ஜெயம் ரவியை பாக்ஸிங் போட வைக்க, ஜெயம் ரவியின் குருநாதர் பொன்வண்ணனுக்கு வலைவிரிக்கின்றார். அதுமட்டுமின்றி ஜெயம் ரவியுடன் மோத வெளிநாட்டில் இருந்து நாதன் ஜோன்ஸ் என்னும் உலகப்புகழ் பெற்ற பாக்ஸிங் வீரரை வரவழைக்கின்றார். பிரகாஷ்ராஜின் வலையில் பொன்வண்ணன் வீழ்ந்தாரா? நாதன் ஜோன்ஸுடன் ஜெயம் ரவி மோதினாரா? ஜெயம் ரவி-த்ரிஷா காதல் திருமணத்தில் முடிந்ததா? படுத்த படுக்கையில் இருக்கும் ஆறுமுகம் உடல் தேறினாரா? என்பதற்கான விடைதான் மீதிக்கதை
ஜெயம் ரவிக்கு ஆக்ரோஷமான பாக்ஸிங் வீரர் வேடம். கிட்டத்தட்ட படம் முழுவதுமே கோபத்துடன் உலா வருகிறார். த்ரிஷாவின் உடலின் எங்கெங்கு தன்னுடைய டாட்டூ இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளும் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் ரொமான்ஸ் செய்கிறார். மற்றபடி உள்ளூர், வட இந்திய, வெளிநாட்டு வீரர்களுடன் ஆக்ரோஷமாக மோதும் பாக்ஸிங் சண்டைக்காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார். பாக்ஸிங் வீரருக்கேற்ற உடற்கட்டையும் கடைசிவரை மெயிண்டெய்ன் செய்துள்ளார். தனி ஒருவன்' வெற்றிக்கு பின்னர் மீண்டும் ஒரு ஜாக்பாட் அடித்துள்ளார் ஜெயம் ரவி.
படத்திற்கு ஒரு ஹீரோயின் வேண்டும் என்ற இடத்தை மட்டும் நிரப்புகிறார் த்ரிஷா. ஜெயம் ரவியின் உருவத்தை தன் உடலின் பல பாகங்களில் டாட்டூ செய்து கவர்ச்சி காட்டுகிறார். உலக சாம்பியனுடன் மோதுவதற்கு முன் தன்னை ஜெயம் ரவி திருமணம் செய்ய வேண்டும் என்று அடம்பிடிக்கும் காட்சியில் மட்டும் ஜொலிக்கின்றார். மற்றபடி த்ரிஷாவின் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு ஏமாற்றம்தான்.
டிவி சேனல் உரிமையாளராக வரும் பிரகாஷ்ராஜூக்கு வழக்கமான வில்லன் வேடம். பல படங்களில் அவர் இதே பாணியில் நடித்துள்ளதால் நடிப்பில் புதுமை காட்ட முடியவில்லை. ஜெயம் ரவியுடன் ஒப்பந்தம் செய்யும்போது நேருக்கு நேர் டீல் பேசும் காட்சிகளில் மட்டும் பிரகாஷ்ராஜின் வில்லத்தனம் எடுபடுகிறது.
ஜெயம் ரவியின் பாக்ஸிங் குருவாகவும், நாட்டுமருந்து வைத்தியராகவும் வரும் பொன்வண்ணன், தான் வளர்த்த வீரனை தானே தோற்கடித்துவிட்டோமே என்று புலம்பும் காட்சி ஓகே. நாதன் ஜோன்ஸின் ஆக்ரோஷம் மிரள வைக்கின்றது. த்ரிஷாவிடம் இன்சூரன்ஸ் பாலிசியை கொடுத்துவிட்டு போட்டிக்கு பின் உனக்கு இது தேவைப்படும் என நக்கலாக சொல்லும்போது, கிளைமாக்ஸில் ஜெயம் ரவியோடு மோதும்போதும் நடிப்பில் ஜொலிக்கின்றார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் மயானக்கொள்ளை பாடல் சூப்பர். மற்ற பாடல்கள் ஓகே ரகம். ஆனால் ஒரு ஆக்ரோஷமான பாக்ஸிங் படத்திற்கேற்ற பின்னணி இசை இல்லை என்பது ஒரு குறையாக உள்ளது.
சதீஷ்குமாரின் கேமராவில் கிளைமாக்ஸ் பாக்ஸிங் சண்டைக்காட்சி படப்பிடிப்பு அபாரம். கிட்டத்தட்ட கால்மணி நேரம் நடக்கும் இந்த சண்டைக்காட்சியை சலிப்பு தட்டாமல் செய்ததில் சண்டைப்பயிற்சி இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவு இயக்குனர் ஆகியோர்களுக்கு பெரும் பங்கு உண்டு.
படத்தின் முக்கியமான பலம் எஸ்.பி.ஜனநாதனின் கூர்மையான வசனம். இரண்டு விளையாட்டு வீரர்களுக்கும் ஒருசில லட்சங்களை கொடுத்துவிட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் டிவி சேனல்களுக்கு சவுக்கடி கொடுக்கும் வசனங்கள். பேராண்மை' படத்தில் இடம்பெற்றது போலவே ஆங்காங்கே அவருடைய வழக்கமான பொதுவுடமை கருத்துக்களும் அவருடைய வசனத்தில் இடம்பெறுகிறது. தகுதியே இல்லாதவங்களை செலக்ட் செய்து அனுப்பறதாலதான் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தையும் தன்னுடைய வசனத்தின் மூலம் உணர்த்தியுள்ளார்.
இயக்குனர் கல்யாணகிருஷ்ணன் பாக்ஸிங்கை வைத்து ஒரு முழுப்படத்தையும் எடுத்ததற்கு பாராட்டலாம். ஆனால் முதல் பாதியின் பாதி படங்கள் இரு பரம்பரையை சேர்ந்தவர்கள் மோதிக்கொள்ளும் காட்சிகள் ரிப்பீட் ஆகி சலிப்பூட்டுகிறது. அதேபோல் இயக்குனரும் எடிட்டரும் இணைந்து படத்தின் நீளத்தையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வந்தாலும் ஜெயம் ரவியின் ரசிகர்களை திருப்தி செய்யும் வகையில் படம் உள்ளது.
'பூலோகம்', ஜெயம் ரவியின் பஞ்ச்சில் பலம் அதிகம்.