ஏஐ மூலம் பவதாரிணி குரல்.. 'லால் சலாம்' படத்திற்கு உதவிய அதே நிறுவனம்.. புதிய தகவல்..!
- IndiaGlitz, [Sunday,June 23 2024]
தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் நேற்று வெளியான நிலையில் இந்த பாடலில் பவதாரிணி குரல் ஏஐ டெக்னாலஜி மூலம் பயன்படுத்தப்பட்டிருந்தது என்பதும் மெலடி பாடலாக அமைந்த இந்த பாடல் முதல் முறை கேட்கும் போது அசத்தலாக இருந்தது மட்டுமின்றி பவதாரிணி குரலை மீண்டும் கேட்க ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் பவதாரிணி குரலை ஏஐ மூலம் உருமாற்றிய நிறுவனம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’லால் சலாம்’ திரைப்படத்தில் ’திமிறி எழுடா’ என்ற பாடலில் மறைந்த பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது குரல்களை மறு உருவாக்கம் செய்ய உதவியவர் கிருஷ்ணன் சேட்டன் என்பவர் தான். இவர் ஏஆர் ரகுமானுடன் பல படங்களில் பணியாற்றிய நிலையில் தற்போது அவர் மறைந்த பாடகர்களின் குரலை மறு உருவாக்கம் செய்து தரும் நிறுவனத்தை வைத்துள்ளார்.
மறைந்த கலைஞர்களின் குடும்பத்தின் அனுமதி பெற்று அவர்களுக்கு சன்மானம் கொடுத்து அந்த கலைஞர்களின் குரலை பயன்படுத்துவது தான் இந்த நிறுவனத்தின் நோக்கம். அதன்படி தான் ‘லால் சலாம்’ படத்திற்காக பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது குரல்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இதே நிறுவனம் ’கோட்’ படத்தில் பவதாரிணி குரலையும் மறு உருவாக்கம் செய்து கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.