பாஸ்கர் ஒரு ராஸ்கல்: அரவிந்தசாமியின் காமெடி முயற்சி
கேரளாவில் 100 நாட்கள் ஓடி வசூலை குவித்த படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. மம்முட்டி, நயன்தாரா நடித்த இந்த படம் தற்போது தமிழில் ரீமேக்காகி 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. மலையாளத்தில் பெற்ற வெற்றி தமிழிலும் பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கும் நிலையில் இந்த படம் குறித்த விமர்சனத்தை பார்ப்போம்
மனைவியை இழந்த அரவிந்தசாமிக்கு ஆகாஷ் மகனும், கணவர் இல்லாத அமலாபாலுக்கு ஷிவானி என்ற ஒரு மகளும் உள்ளனர். ஆகாஷும் ஷிவானியும் ஒரே வகுப்பில் படிக்கும் நண்பர்கள். தாயன்பு இல்லாத ஆகாஷ், அமலாபாலை தனது தாயாக நினைக்க, தந்தையில்லாத ஷிவானி, அரவிந்தசாமியை தந்தையாக நினைத்து பழகுகின்றனர். இந்த நிலையில் தங்களுக்கு அம்மா, அப்பா இருவரும் வேண்டுமென்றால் அரவிந்தசாமி, அமலாபாலுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று குழந்தைகள் முடிவு செய்கின்றனர். இந்த பேச்சு பெரியவர்கள் வரை சென்று திருமணம் நடக்கவுள்ள நிலையில் திடீரென அமலாபாலின் கணவர் வருகிறார். அமலாபாலையும் ஷிவானியையும் தான் இனிமேல் நல்லமுறையில் பார்த்து கொள்வதாக கூறுகிறார். இதனால் அரவிந்தசாமியும் அமலாபாலும் அதிர்ச்சி அடைகின்றனர். இதன் பின்னர் அமலாபால் தனது கணவருடன் இணைந்தாரா? அல்லது அரவிந்தசாமியை திருமணம் செய்து கொண்டாரா? என்பதே மீதிக்கதை
'தனி ஒருவன்' படத்தில் அமைதியான வில்லனாக மிரட்டிய அரவிந்தசாமி இந்த படத்தில் ஆர்ப்பாட்டமான, அடிதடியில் இறங்கும் பாஸ்கர் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். மகனிடம் பாசமழை பொழிவது, அப்பாவிடம் காமெடி செய்து திட்டு வாங்குவது, அமலாபாலிடம் ரொமான்ஸ் செய்வது என்று ஒரு ஹீரோ செய்யக்கூடிய வேலையை சரியாக செய்துள்ளார். ஆங்காங்கே சூரி, ரோபோசங்கருடன் இணைந்து காமெடியும் செய்கிறார். இருப்பினும் மம்முட்டியை அவரால் நடிப்பில் வீழ்த்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா நடித்த சீரியஸான கேரக்டரான அனு என்ற கேரக்டரில் அமலாபால் நடித்துள்ளார். அவர் நயன்தாரா அளவுக்கு நடித்தாரா? என்பதை ரசிகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். உங்க அப்பாவை இழந்த மாதிரி நான் உன்னையும் இழக்க விரும்பவில்லை என்று மகள் ஷிவானியுடம் வசனம் பேசும்போது அவரது நடிப்பு மெருகேறுகிறது.
படத்தின் முக்கிய கேரக்டர்கள் இரண்டு குட்டீஸ்களான மாஸ்டர் ராகவனும், பேபி நைனிகாவும் தான். குறிப்பாக மாஸ்டர் ராகவன் தந்தை அரவிந்தசாமிக்கு மேனரிசம் கற்றுக்கொடுக்கும் இடம் சூப்பர். பேபி நைனிகா, வயதுக்கு மீறிய நடிப்பால் குழந்தைத்தனம் மிஸ்ஸிங்
சூரி, ரோபோசங்கர், ரமேஷ் கண்ணா மூவரும் காமெடி செய்ய முயற்சித்துள்ளனர். பட்டாசு மற்றும் பேண்ட் காட்சி தவிர வேறு எங்கும் சிரிப்பு வரவில்லை. ஓரிரண்டு காட்சிகளில் வரும் நிகிஷா பட்டேல் கவர்ச்சிக்கு உதவியுள்ளார். நாசர் தனது அனுபவத்தால் தனது கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார்.
முதல் பாதியை ஜாலியாக காமெடியுடன் கூடிய திரைக்கதையை சரியாக கொண்டு சென்ற இயக்குனர் சித்திக், அமலாபாலின் கணவர் மீண்டும் ரிட்டன் என்ற காட்சிக்கு பின்னர் திணறி இருக்கின்றார் என்பது படம் பார்க்கும்போது தெரிகிறது. ஹார்ட் டிஸ்க்கில் உள்ள மர்மம், குழந்தைகளை கடத்துதல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் பல படங்களில் ஏற்கனவே பார்த்த காட்சிகள் என்பதால் அலுப்பு தட்டுகிறது. வழக்கமாக சித்திக் படத்தில் இருக்கும் உணர்வுபூர்வமான காட்சிகள் மற்றும் திருப்பங்கள் இந்த படத்தில் மிஸ்ஸிங். குறிப்பாக இரண்டாம் பாகம் சுவாரசியம் இல்லாத காட்சிகளால் படத்தின் வேகம் குறைகிறது.
அம்ரேஷ் கணேஷின் இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை என்றாலும் பின்னணி இசை ஓகே ரகம். விஜய் உலகநாத் ஒளிப்பதிவு மற்றும் கவுரிசங்கரின் படத்தொகுப்பு ஆகியவை கச்சிதம்
அரவிந்தசாமி மற்றும் மாஸ்டர் ராகவன் காட்சிகளுக்காகவும், ஒருசில காமெடி காட்சிகளுக்காகவும் ஒருமுறை பார்க்கலாம்.
Comments