கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்: திரையரங்கு உரிமையாளர்களுக்கு பாரதிராஜா எச்சரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
சுரேஷ் காமாட்சி இயக்கிய 'மிக மிக அவசரம்' திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் திடீரென திரையரங்குகள் கிடைக்காததால் வெளியாகவில்லை. இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்களின் இந்த போக்கினை ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கம் கண்டித்துள்ள நிலையில் தற்போது இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜாவும் காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சமீப காலத்தில் நான் பார்த்து ரசித்த திரைப்படம், சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கியுள்ள ’மிக மிக அவசரம்’. பெண்களின் கொடுந்துயர் ஒன்றினை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் படம். 'சமுதாயத்துக்குத் தேவையான இப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்' என்று அமைச்சர் பெருமக்கள், காவல்துறை அதிகாரிகள், பெண் ஆளுமைகள் எனப் பலர் நெகிழ்ந்து பாராட்டிய படம்.
கடந்த 11-ம் தேதி மிக மிக அவசரம்' திரைப்படம் வெளியாவதாக இருந்தது. அதற்கு முன் மூன்று வாரங்களுக்கு 85 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்து தொடர்ந்து விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஆனால், படம் வெளியாகும் முதல் நாள் இரவு 17 காட்சிகள் தான் திரையிட முடியும் என்று கூறிவிட்டனர் திரையரங்க உரிமையாளர்கள். காரணம் அதே நாளில் வேறு படம் வருகிறதாம். அதற்கு அதிக திரையரங்குகளை ஒதுக்குவோம் என்று கூறிவிட்டனர். பத்துமாதம் சுமந்து பல வலிகளைத் தாங்கி பிரசவிக்கும் நேரம், பெண்ணின் வயிற்றில் கட்டையால் அடிப்பது போன்ற கொடூரச் செயல் இது.
மக்கள் எந்த படத்தைப் பார்க்க வேண்டும் என்பதை யாரோ சிலர் தீர்மானிப்பது முறையல்ல. தவிர எந்தவொரு தொழிலாக இருந்தாலும் அதன் நெறிமுறைகளுக்கு வாக்குக்குக் கட்டுப்பட்டு நடப்பதே அனைவருக்கும் நல்லது. திரையரங்க உரிமையாளர்கள் இதேபோக்கைத் தொடர்ந்தால், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் இணைந்து தக்க நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
திரைத்துறையினரிடம் அக்கறையும் பாசமும் கொண்ட தமிழக முதல்வர் அவர்கள், இது போன்ற சிறுபட்ஜெட் படங்களுக்கு மீண்டும் பிரச்சினை வராமல் இருக்க நல்லதொரு தீர்வு கிடைக்கச் செய்ய வேண்டும்
இவ்வாறு பாரதிராஜாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments