எஸ்பிபிக்கு அரசு மரியாதை: பிரதமர், முதல்வருக்கு பாரதிராஜா நன்றி!
- IndiaGlitz, [Saturday,September 26 2020]
பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் நம்மை தவிக்கவிட்டு மறைந்துவிட்ட நிலையில் அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு கோடிக்கணக்கான எஸ்பிபி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் இமயம் இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
தமிழ் திரை ரசிகர்களை தன்னுடைய இனிய குரலால் இத்தனை ஆண்டுகாலம் தாலாட்டி கொண்டிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மீளா தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்.
விலைமதிப்பில்லாத அந்த இசை கலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்வது ஒன்று மட்டுமே அவருக்கு தருகின்ற சரியான அங்கீகாரமாக இருக்கும். இதனை உணர்ந்து அதை செயல்படுத்த முன்வந்துள்ள முதல்-அமைச்சருக்கு கலை உலகின் சார்பிலும், இசை ரசிகர்களின் சார்பிலும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமரும், தமிழக முதல்-அமைச்சரும் கலைத்துறையினர் மீது எந்த அளவுக்கு அன்பும், பாசமும் கொண்டிருக்கிறார்கள் என்பதை மொத்த கலை உலகமும் நன்கு அறியும். அதற்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு தான் தமிழக முதல்-அமைச்சர் இந்த அறிவிப்பு.
இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.
— Bharathiraja (@offBharathiraja) September 26, 2020