என் பெயரை எப்படி பயன்படுத்தலாம்? பாரதிராஜா ஆவேச அறிக்கை

  • IndiaGlitz, [Tuesday,May 12 2020]

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நேரத்தை பயனுள்ள வகையில் கழிப்பதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள பிரச்சினைகளையும், தயாரிப்பாளர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த மற்ற பிரிவினருக்கு இடையே இருக்கும் பிரச்சினைகளையும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவுக்கு கொண்டுவர தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக நேற்று தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தது. இந்த அறிக்கையில் பாரதிராஜா, ஆர்கே செல்வமணி உள்பட 42 உறுப்பினர்களில் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் இந்த குழுவில் தன்னுடைய பெயரை தன்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

முன்னாள் தலைவர்கள் அனுமதியோடு ஒரு குழு அமைக்கப்பட்டதாகப் பட்டியலொன்றும் அதனோடு சேர்ந்த அறிக்கையும் பத்திரிகைச் செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.

நாகரீகம் என்பது பெயரைப் பயன்படுத்தும் முன் அனுமதி கேட்பது. ஆனால் நான் அறியாமல் எனது பெயரைப் பயன்படுத்தியது சரியல்ல.
தேர்தல் தள்ளிப் போடப்பட்ட நிலையில் பொதுவில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவை தெரிந்து கொள்ளாது சுயமாக ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்து அவர்கள் திரையுலகின் பிரச்சனையைத் தீர்ப்பார்கள் என அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் என் பெயரை என்னைக் கேட்காமல் பயன்படுத்தியது முற்றிலும் தவறான அணுகுமுறை.

பத்திரிகையாளர்கள் இச்செய்தி தவறானது என்பதை உணர்ந்து, எந்தவித அனுமதியும் பெறாமல் எனது பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அறிக்கையை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

பாரதிராஜாவின் இந்த அறிக்கையால் தயாரிப்பாளர் சங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது