வைரமுத்துவை தட்டிக்கேட்க யாருக்கும் அதிகாரமில்லை: பாரதிராஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
கவியரசு வைரமுத்து சமீபத்தில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதாக அவரை இந்து அமைப்புகளும், ஒருசில அரசியல் கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் வைரமுத்துவின் நீண்ட நாள் நண்பரும், இயக்குனர் இமயம் என்ற பெருமையை பெற்றவருமான பாரதிராஜா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில், தனிமனித உரிமை பறிக்கப்பட்டு, எவ்வளவோ நாட்களாகி விட்டன. எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது. சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கசப்பான சம்பவம் என்னை இரவெல்லாம் தூங்கவிடாமல் செய்தது. தமிழகத்தில் வரலாற்றில் புலவர்கள், எழுத்தாளர்கள் கவிஞர்கள் தோன்றி இறவாப்புகழ் அடைந்திருக்கிறார்கள்.
இன்று, நம் கொடுப்பினை நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பெருங்கவிஞன், கவிப்பேரரசு வைரமுத்து, தமிழைத் திசைகள் தோறும் தெரியப்படுத்தியவர்.
மணிமேகலையும், சிலப்பதிகாரமும் இரட்டைக்காப்பியங்கள் என்றால், வைரமுத்து படைத்த கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் எளிய மனிதர்களின் இரட்டைக் காப்பியமில்லையா? அந்த அளவில் தமிழை எளிமைப்படுத்திய கவிஞனை இழிசொற்களால் எப்படிப் பேசலாம்?
வைரமுத்து என்பவர் தனிமனிதரல்ல, தமிழினத்தின் பெருஅடையாளம் என்பதை விமர்சிப்பவர்களே, உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு படைப்பாளன் தன் கருத்துகளைச் சொல்லலாம். இல்லை மேற்கோள் காட்டலாம் அதை அட்சர சுத்தமாக தவறென்று தட்டிக் கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை.
சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சமகால இலக்கியம் என்ற பாகுபாடில்லாமல் மறைந்த கவிஞர்களை, எழுத்தாளர்களை மேடை தோறும், முழங்கி அவர்களின் பெருமைகளைப் பட்டியலிடும் கவிஞனை எப்படி நாக்கில் நரம்பில்லாமல் ஒருவர் பேசுவது? எச்.ராஜா பேசியது அநாகரீகத்தின் உச்சம். ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில், ஆண்டாளை எளிய மனிதனுக்கும் புரியும் விதத்தில் பேசிய கவிஞனின் பிறப்பை இழிசொல்லால் இழிவுபடுத்தி விட்டார்.
வைணவத்தைத் தமிழாக்கிய திருப்பாவையை, கருவறையிலிருந்து தெருவுக்குக் கொண்டு வந்து சாதாரண மனிதர்களின் காதுகளில் ஊற்றிய கவிஞனைத் தரம் தாழ்த்திப் பேசுவதா? திருப்பாவை சமஸ்கிருதமல்ல, தமிழ் என்பதை எச்.ராஜா உணர்ந்து கொள்ளவேண்டும்.
நிறைய மனிதர்களின் வாழ்வுக்கு ஒரு வழிகாட்டியாய் வாழும் ஒரு மனிதனை நாக்கில் நரம்பில்லாமல் எப்படி பேச முடியும்? கவனமாகப் பேசுங்கள். எச்.ராஜா போல நிறைய மனிதர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். ஆனால், வைரமுத்து போல சில நல்ல அடையாளங்கள் தான் இருக்கின்றன.
எச்.ராஜா பேச்சு எங்கள் தமிழர்களைப் பழித்தது. தமிழ் உணர்வுகளைச் சிதைத்தது. தமிழனாக இருந்தால் அப்படிப் பேசியிருக்கமாட்டார். நாங்கள் தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் இழக்கவில்லை என்பதை எச்சரிக்கை செய்கிறேன்.
இவ்வாறு பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout