கள்ளிச்செடி காயத்துக்கே கலங்குவேன்: சொந்த மாவட்ட சோகம் குறித்து பாரதிராஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் ஏற்பட்ட உயிர்ப்பலியின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ள நிலையில் தனது சொந்த மாவட்டத்தில் ஏற்பட்ட சோக சம்பவம் குறித்து இயக்குனர் இமயம் பாரதிராஜா கூறியதாவது:
'தேனி மாவட்டம் குரங்கணியில் ஏற்பட்ட தீவிபத்து பற்றிக் கேள்விப்பட்டபோது, என் நெஞ்சுக் கூட்டுக்குள் நெருப்பு பற்றிக் கொண்டதாய் நினைக்கிறேன். தேனி மாவட்டம், அன்பிற்கும் ஈரத்திற்கும் மட்டுமே பெயர் பெற்றது. ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட தீவிபத்து, எங்கள் மாவட்டத்திற்கே ஆறாத காயத்தை ஏற்படுத்திவிட்டது.
கள்ளிச் செடிகளுக்கு காயம் பட்டாலே கலங்கிப் போவேன். இத்தனை மனிதத் தளிர்கள் தீய்க்கு இரையானதையும், பெருங்காயம் பட்டுப் பெருந்துயர் கொண்டதையும் நினைத்துக் கலக்கமடைகிறேன். இந்த வெப்ப நேரத்தில் எப்படி தீப்பற்றியது என்பது திகைப்புதான். மூங்கிலோடு மூங்கில் உரசினாலே தீப்பற்றிக் கொள்ளும் என்பது உண்மை.
இருந்தாலும், சமூக விரோதிகள் யாரேனும் இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்டிருந்தால், அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இந்த நிகழ்வில் மெத்தனம் காட்டாமல், எரிந்து கொண்டிருக்கும் காட்டுத்தீயை அணைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். பிள்ளைகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, காயம்பட்டவர்கள் உடனடியாகக் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout