இசைஞானிக்கு இணையான இசைக்கலைஞன் இல்லை: பாரதிராஜா புகழாராம்
- IndiaGlitz, [Monday,December 30 2019]
இளையராஜாவும் பாரதிராஜாவும் கடந்த சில ஆண்டுகளாக கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருந்தாலும் சமீபத்தில் அவர்கள் சமாதானம் ஆகிவிட்டது போல் தெரிகிறது. இந்த நிலையில் இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடித்த தமிழரசன் படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய பாரதிராஜா கூறியதாவது:
இளையராஜாவுடன் முரண்பாடு ஏற்பட்டு, நிறைய இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்துவிட்டேன். இன்றளவும் இனியும் அவரை மிஞ்சி ஒரு இசைக் கலைஞன் பிறந்து வருவது கஷ்டம். பாடல்கள் கூட பாடிவிடலாம். ஆனால், பின்னணி இசை என்பது ஒரு படத்துக்கு உயிர் நாடி. என்னுடைய படங்கள் பேசுகிறது என்றால், அது இளையராஜாவின் இசையால் மட்டுமே பேசும். எந்த இடத்தில் எந்த இசை இருக்க வேண்டும், எந்த அளவுக்குச் சப்தம் இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கிற ஒரே ஆள் அவர்.
படத்தில் ஒன்றுமே இல்லாமல் எடுத்துக் கொடுத்தால் கூட பின்னணி இசையின் மூலம் உயிர் வர வைத்துவிடுவார். அவர் தமிழகத்துக்குக் கிடைத்தது மிகப்பெரிய விஷயம். எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவருக்கு இணையான இசைக் கலைஞனைக் கண்டுபிடிப்பது கஷ்டம்.
மேலும் விஜய் ஆண்டனி குறித்து பாரதிராஜா கூறியபோது, ', விஜய் ஆண்டனி ஒரு ஆச்சரியமான முகம். நேரில் ரொம்ப சாதாரணமாக இருப்பார். ஆனால் படத்தில் வேற மாதிரி இருக்கிறார். விமானத்தில் பார்த்தபோது, நல்ல இசையமைப்பாளர் ஏன் நடிகன் ஆனார் என யோசித்தேன். விஜய் ஆண்டனிக்கு நல்ல மனது இருக்கிறது.
இவ்வாறு பாரதிராஜா பேசினார்