தேசிய விருது புறக்கணிப்பு குறித்து பாரதிராஜா
- IndiaGlitz, [Friday,May 04 2018]
சமீபத்தில் திரைப்பட கலைஞர்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த ஆண்டு தமிழ் படங்களுக்கு வெறும் நான்கே விருதுகள் மட்டுமே கிடைத்தது.
இந்த நிலையில் விருது பெற்ற கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. ஆனால் இந்த விழாவில் கலந்து கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் 11 விருது பெற்ற கலைஞர்களுக்கு மட்டுமே விருது வழங்குவார் என்றும் மற்றவர்களுக்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
தேசிய விருது என்பது குடியரசு தலைவர் கையால் வாங்கும் பெருமைக்குரிய விருது என்றும், விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் குடியரசு தலைவரே விருது வழங்க வேண்டும் என்றும் கலைஞர்களால் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனையடுத்து சிறந்த தமிழ்ப்படம் விருது பெற்ற 'டூலெட்' பட இயக்குனர் செழியன் , மலையாள நடிகர் பகத்பாசில் உள்பட 68 கலைஞர்கள் தேசிய விருது விழாவை புறக்கணித்தனர்.
இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா கருத்து கூறியபோது, 'தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை திரைக்கலைஞர்கள் புறக்கணித்தது நியாயமானதுதான் என்றும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் இருந்து தேசிய விருதுகளை வாங்க மறுத்து விழாவை திரைக்கலைஞர்கள் புறக்கணித்தது முற்றிலும் சரியானது என்றும், தேசிய விருது என்பது குடியரசு தலைவரால்தான் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.