அந்த காலத்திலேயே LCU மாதிரி சினிமாட்டிக் யுனிவர்ஸ் படம் எடுத்த பாரதிராஜா.. பட்டிமன்ற பேச்சாளர் வீடியோ..!
- IndiaGlitz, [Sunday,January 07 2024]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது முந்தைய படங்களின் காட்சிகள் மற்றும் கேரக்டர்களை அடுத்தடுத்த படங்களில் காட்டி வருவதால் அவரது திரைப்படங்கள் LCU என்று கூறப்படுகின்றன. தமிழ் சினிமாவில் முதன் முதலாக சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்று ஆரம்பித்தது லோகேஷ் தான் என்பது ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.
ஆனால் அந்த காலத்திலேயே பாரதிராஜா தனது முந்தைய படத்தின் காட்சியை மறைமுகமாக அடுத்த படத்தில் வைத்து, தான் ஒரு சினிமா சினிமாட்டிக் யுனிவர்ஸ் இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார்.
பாரதிராஜா இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ’16 வயதினிலே’ திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் பரட்டையை சப்பாணி கொன்றுவிடுவார். அதன் பிறகு அவர் சிறைக்கு சென்று விடுவார். இதனை அடுத்து மயிலு, ரயில்வே ஸ்டேஷனில் சப்பாணியின் வருகைக்காக காத்திருப்பார். அதன் பிறகு சப்பாணி வந்தாரா? மயிலு சப்பாணி இணைந்தார்களா? என்பதெல்லாம் தெரியாது.
ஆனால் பாரதிராஜா தனது அடுத்த திரைப்படமான ’கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தில் ஒரு விசேஷம் நடக்கும் காட்சியை வைத்திருப்பார். அதில் ஏராளமானோர் மொய் செய்ய வருவார்கள். அப்போது மைக்கில் பெட்டிக்கடை மயிலு புருஷன் சப்பாணி ஐந்து ரூபாய் என்று குரல் கேட்கும்.
இதனை அடுத்து மயிலு மற்றும் சப்பாணி ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டு பெட்டிக்கடை வைத்து ,மொய் செய்யும் அளவுக்கு நன்றாக வாழ்கிறார்கள் என்பதை சினிமாட்டிக் யுனிவர்ஸ் காட்சியாக பாரதிராஜா தனது அடுத்த படத்தில் வைத்திருந்தார்.
இதனை பட்டிமன்ற பேச்சாளர் கவிதா சமீபத்தில் நடந்த பட்டிமன்றத்தில் கூறிய நிலையில் இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.