என்கிருந்து குரல் வரவேண்டுமோ அங்கிருந்து வரவில்லை: ரஜினியை தாக்கிய பாரதிராஜா
- IndiaGlitz, [Friday,January 19 2018]
வேலுபிரபாகரன் இயக்கவுள்ள 'கடவுள் 2' படத்தின் தொடக்கவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இருவருமே வைரமுத்து குறித்து பேசியபோது, 'ரஜினி வைரமுத்துவுக்கு இதுவரை ஆதரவாக கருத்து தெரிவிக்காததற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த விழாவில் பாரதிராஜா பேசியதாவது:
கவியரசு வைரமுத்துவுக்கு நியாயமாக எங்கிருந்து குரல் வரவேண்டுமோ, அங்கிருந்து வரவில்லை, எவன் வார்த்தைகளால் வடித்தெடுத்து, எவன் வார்த்தைகளால் தமிழக மக்களுக்கு கருத்துக்களை சொல்லி, எவன் உனக்கு தமிழை ஊட்டினானோ அவனுக்கு நீ ஆதரவு தரவில்லை. வைரமுத்துவின் வார்த்தைகளை வாங்கி வாங்கி அடையாளப்படுத்தவர் ஏன் குரல் கொடுக்கவில்லை. இன்று நீங்கள் அறுவடை செய்ய நினைக்கும் செயல்களுக்கு உண்மையில் உரிமையாளர் வைரமுத்துதான்.
எங்கள் இடத்திற்கு யார் வேண்டுமானாலும் விருந்தாளி வரலாம், உட்காரலாம், சாப்பிட்டலாம், ஆனால் விருந்தாளி திண்ணையில்தான் படுக்க வேண்டும். என் படுக்கையை குறி வைப்பது தவறு. என் படுக்கையை பகிர்ந்து கொள்ள நீ யார்? பத்து வருஷமாக உங்களுக்கு பிள்ளையே இல்லை நான் பெற்றுத் தருகிறேன் என்று சொல்கிறார்களா? எங்களுக்கு தலைமை இல்லை என்று யார் சொன்னார்கள். நாங்கள் பொறுத்திருந்தோம், இன்று தமிழகத்தில் கோடித் கோடித் தலைவர்கள் உள்ளனர்.
தவறே செய்யவில்லை என்றாலும் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள் என்று வைரமுத்து மன்னிப்பு கேட்டார். மன்னிப்பு கேட்ட பின்னரும் விடாமல் இந்த ஒரு விஷயத்தை பிடித்துக் கொண்டு எப்படியாவது உள்ளே வர முயற்சிக்கிறார்கள். இனியும் வைரமுத்து மீது வசைபாடியோ, மேலே கை வைத்தோ பார் என்ன நடக்கிறது என்று. வைரமுத்துவின் நடை போலவே அவருடைய எழுத்திலும் மிடுக்கு இருக்கும். இனியும் எங்கேயாவது இது போன்ற விமர்சனங்கள் தொடர்ந்தால் அவர்களின் தலையை நான் வெட்டுவேன் என்று பாரதிராஜா பேசினார்.