ரஜினிகாந்த் கர்நாடகக் காவியின் தூதுவர்: பாரதிராஜா
- IndiaGlitz, [Monday,April 16 2018]
கடந்த சில நாட்களாக இயக்குனர் பாரதிராஜா உள்பட ஒருசில இயக்குனர்கள் காவிரி பிரச்சனை குறித்து பேசுவதை விட ரஜினியை தாக்குவதில் அதிக நோக்கம் கொண்டவர்களாக உள்ளனர். இவர்களது நோக்கம் காவிரியை வரவழைப்பதா? அல்லது ரஜினியை கர்நாடகத்திற்கு அனுப்புவதா? என்ற சந்தேகம் நடுநிலையாளர்களுக்கு எழுந்துள்ளது.
இந்த நிலையில் இன்று இயக்குனர் பாரதிராஜா, ரஜினியை சற்று கடும் சொற்களால் விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முழு தமிழகமும் ஒரே குரலில் தங்கள் உணர்வுகளை எதிரொலித்த இந்த நேரத்தில், நம் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவையும் அறவழியில் போராடியது. ஆனால், நம் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு, நம் மீது கத்தி வைத்துப் பதம்பார்க்க நினைக்கிறது ரஜினியின் சமீபத்திய டுவிட்டர் பேச்சு.
நான் அவரைக் கேட்கிறேன்... எது வன்முறையில் உச்சகட்டம் ரஜினி அவர்களே? அறவழியில் போராடிய எம் தமிழர்கள் உங்களுக்கு வன்முறையாளர்களா? தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியில் பேசும் பேச்சு இது.
தங்களுடைய திரைப்படம் வெளியாகும்போது மட்டும் பூச்சாண்டி காட்டும் ஒரு நடிகனை, தமிழ்த் திரையுலகம் சந்தித்ததே இல்லை. தமிழ்நாட்டிலும் சரி, உலக அளவிலும் சரி... தமிழன் கொட்டிக் கொடுத்த பணத்தில், சேர்த்து வைத்த செல்வத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?
இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்தபோது குரல் கொடுத்தீர்களா? நியூட்ரினோவுக்கு எதிராகக் களத்தில் இறங்கிப் போராடினீர்களா? இல்லை, ஓர் அறிக்கையாவது விட்டீர்களா? மீத்தேன் பற்றி ஏதாவது வாய் திறந்தீர்களா?
எதற்கும் வாய் திறக்காத நீங்கள், இன்று காவிரிக்காக ஒன்றுகூடிய தமிழர்களின் ஒற்றுமை உணர்வை வன்முறைக் கலாச்சாரம், இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்கிறீர்களே...
ஓ... இப்போதுதான் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது, நீங்கள் தமிழன் அல்லாத கர்நாடகக் காவியின் தூதுவன் என்று! உங்கள் வேஷம் மெல்ல மெல்லக் கலைகிறது. ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள்... காவிரி பிரச்சினை பற்றி எரிந்தபோது வெந்து செத்தது எங்கள் தமிழினம், சேதமடைந்தது எங்கள் தமிழர் சொத்துகள்.
அங்குள்ள கலைஞர்கள் எல்லாம் ஒன்றுகூடி எதிர்க்குரல் கொடுத்த போதும், அங்குள்ள காவலர்கள் துரத்தி துரத்தி அடித்தபோதும், தமிழ்நாடு பதிவு எண் கொண்ட அனைத்து வாகனங்களையும் அடித்து நொறுக்கியபோதும், வாகன ஓட்டிகளை நிர்வாணப்படுத்தி அடித்தபோதும் வாய் திறக்காத நீங்கள், இன்று தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, தமிழனிடம் உறிஞ்சிய ரத்தத்தில் ராஜ வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, எங்களையே வன்முறையாளர்கள் என்று பட்டம் சுமத்துகிறீர்கள்.
சீருடையில் இருந்தவரும் எங்கள் தமிழன் தான். எங்கோ கூட்டத்தில் அடையாளம் இல்லாத ஒருவன் அல்லது இந்த நிகழ்ச்சியைக் கறைபடுத்த நினைத்த ஒருவன் செய்த செயலுக்கு நாங்கள் வருந்துகிறோம். நீங்கள், எங்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம்.
நடந்த போராட்டம் தனி மனிதர்களுக்கானது அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டுச் சாப்பாட்டிற்கும், உங்கள் வீட்டு குடிதண்ணீருக்கும் சேர்த்துத்தான் எங்கள் வீரத்தமிழ் இளைஞர்கள் பலர், காவல்துறை நடத்திய அடிதடியில் ரத்தம் சிந்தினார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பேசும்போது, எதைப் பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேசுங்கள். இல்லையென்றால், எம் தமிழ் மக்களால் நீங்கள் ஓரம்கட்டப்படுவீர்கள். அந்த நாளும் வெகுதூரத்தில் இல்லை என்பதையும் நீங்கள் நன்கு உணர்வீர்கள் என்பதையும் உங்களுக்கு சொல்லிக்கொள்ள நினைக்கிறேன்”
இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.