மீண்டும் இணைந்த தமிழ் திரையுலகின் இரு மேதைகள்!

  • IndiaGlitz, [Friday,November 01 2019]

தமிழ் சினிமாவில் பாரதிராஜாவும் இளையராஜாவும் புதிய புரட்சியை உருவாக்கினார்கள் என்றால் அது மிகையில்லை. ஸ்டுடியோக்களில் மட்டுமே திரைப்படங்கள் எடுத்து கொண்டிருந்த காலத்தில் முதல்முறையாக கேமிராவை வெளியே எடுத்து கொண்டு சென்று படப்பிடிப்பை நடத்தியவர் பாரதிராஜா. புரட்சிகரமான கருத்துக்கள், புதுமுகங்களை வைத்து அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி தனி முத்திரை பதித்தவர் இயக்குனர் இமயம்.

அதேபோல் திரையிசை உலகில் கின்னஸ் சாதனை புரிந்து யாரும் அசைக்க முடியாத உயரத்தில் இசை சாம்ராஜ்யம் நடத்தி வருபவர் இசைஞானி இளையராஜா. பாரதிராஜா, இளையராஜா ஆகிய இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்த படங்களில் உள்ள பாடல்கள் காலத்தால் அழியாதது. 16 வயதினிலேயே முதல் கடலோரக்கவிதைகள் வரை பாரதிராஜாவின் படங்கள் வெற்றி பெற ஒரு முக்கிய காரணம் இசைராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஒருசில கருத்துவேறுபாடுகள் காரணமாக இருவரும் கடந்த சில ஆண்டுகளாக இணைந்து பணிபுரியாத நிலையில் தற்போது இருவரும் இணைந்துள்ளனர். இதுகுறித்து பாரதிராஜா தனது சமூக வலைத்தள பக்கத்தில் இயலும்,இசையும், இணைந்தது .. இதயம் என் இதயத்தை தொட்டது என் தேனியில்.. என்று பதிவு இருவரும் இணைந்த ஒரு புகைப்படத்தையும் செய்துள்ளார்.

இதனையடுத்து மீண்டும் முதல் மரியாதை, கடலோரக்கவிதைகள் போன்ற மேஜிக் திரையில் ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் சீனு ராமசாமி கூறுகையில், ‘இரண்டு உள்ளங்கள் இணைந்தன. பாரதிராஜா, இளையராஜா எங்கள் மூத்த கலைப்பிதாமகர்கள் வாழ்க.. என்று குறிப்பிட்டுள்ளார்.