இசைஞானி ரீவைண்ட்.....! ராஜாவுக்கு ராஜா வாழ்த்து மழை..!

தனது ஆருயிர் தோழர் இசைஞானி இளையராஜாவிற்கு, இயக்குனர் பாரதிராஜா அவர்கள் இன்று பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் 78-ஆவது பிறந்தநாளான இன்று, இசை ரசிகர்கள் அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். காலம் கடந்தும் அவர் இசையை ரசிக்க ஏராளாமான ரசிகர்கள் கூட்டம் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். உலகளாவிய இசைஞானி ரசிகர்கள், அவர்களுக்கு பிடித்த பாடலை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

கடந்த 1943-ஆம் ஆண்டில், மெட்ராஸ் மாகாணம், தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணையபுரம் என்ற ஊரில் பிறந்தவர் தான் இளையராஜா. இவரின் இயற்பெயர் ஞானதேசிகன் என்பதாக இருந்தாலும், பள்ளியில் சேர்ப்பதற்காக தகப்பனார் இவரது பெயரை ராஜய்யா என மாற்றி வைத்தார். ஆனால் கிராம மக்களோ இராசய்யா என அன்போடு அழைப்பார்கள்.இளையராஜாவிற்கு தமிழகத்தில் உள்ள நாட்டுப்புறப்பாடல்கள் மீது மிகுந்த ஆர்வமாம். இதனால் தன்னுடைய மூத்த சகோதரரான பாவலர் வரதராஜன் நடத்திய பாவலர் பிரதர்ஸ் இசைக்குழுவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதன்முலம் பல ஊர்களில் நடந்த கச்சேரிகளில் பங்கேற்று வந்தார்.

ராஜா தமிழ் திரையுலகில் கால் பதித்த முதல் திரைப்படம் 1975-இல், பஞ்சு அருணாச்சலம் தயாரித்திருந்த அன்னக்கிளி. 70-களில் ஏ.எம்.ராஜா என்ற இசையமைப்பாளர் இருந்ததால், இசைஞானியின் பெயருக்கு முன்னாள் தயாரிப்பாளர் அருணாச்சலம் இளைய என்ற அடைமொழியை சேர்த்து, இளையாராஜா என்று அழைக்கத்துவங்கினார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலுக்குத்தான் ராஜா அவர்கள் முதன்முதலாக இசையமைத்தார்.

இசையில் மேலும் மிகுந்த ஆர்வமுள்ள இளையராஜா மேற்கத்திய இசை, இசை நுட்பங்கள் உள்ளிட்டவற்றை, சென்னையைச்சேர்ந்த பேராசிரியர் தன்ராஜ் என்பவரிடம் தான் முறையாகக் கொண்டார். அஞ்சல்வழி கல்வி மூலமாக லண்டனில் உள்ள டிரினிட்டி இசைக்கல்லூரியில், இசையமைப்பையும், டி.வி. கோபாலகிருஷ்ணனிடம் கர்நாடக சங்கீதத்தையும் கற்றுக்கொண்டார். இவருக்கு இசைஞானி என்று பெயர் சூட்டியது முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தான். அன்னக்கிளி படத்தில் துவங்கிய இவரின் இசைப்பணி, தற்போது வரை நீண்டுகொண்டேதான் செல்கிறது. இன்றளவிலும் ஏராளமான இசை ரசிகர்களை கட்டிப்போட வைத்துள்ளது ராஜாவின் ரம்யமான இசை. இவர் இதுவரை ஆயிரத்திற்கு அதிகமான படங்களில், சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்து உலகளாவிய சிறந்த இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

ராஜாவின் மனைவி பெயர் ஜீவா, இவர் கடந்த 2011-இல் காலமானார். இந்த தம்பதிக்கு கார்த்திக்ராஜா, பவதாரிணி மற்றும் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூத்தமகன் கார்த்திராஜா அமைதிப்படை, உழைப்பாளி, டும் டும் டும், த்ரீ ரோஸஸ் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் மகளும் சினிமாவில் சிறந்த பாடகியாக வலம் வருகிறார். இளையமகன் யுவன் சங்கர் ராஜா தற்போது தமிழ்சினிமாவின் மிகப்பெரிய இசையமைப்பாளராக வெற்றிக்கொடி கட்டிப்பறக்கிறார். இவரது சகோதரர் கங்கை அமரன் அமரன் கரகாட்டக்காரன், கோழி கூவுது உள்ளிட்ட வெற்றிப்படங்களை இசையமைத்தும், பாடலாசிரியராகவும் இருந்துள்ளார்.

இளையராஜாவும், இயக்குனர் பாரதிராஜாவும் நெருங்கிய நண்பர்கள். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட பல பாரதிராஜாவின் படங்களுக்கு, இசைஞானி இசையமைத்துள்ளார். இறுதியாக கடந்த 1992-இல் தான் இருவரும் : நாடோடி தென்றல் என்ற படத்தில் இணைந்தனர். அதற்குப்பின் இவர்கள் கூட்டணியில் புதிய படம் வருவதாக பேசப்பட்டது. ஆனால் இன்னும் வரவில்லை, விரைவில் இருவரும் மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் இசைஞானியின் பிறந்தநாளுக்கு இயக்குனர் பாரதிராஜா டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். அவரை பதிவிட்டிருப்பதாவது,
உனக்கும்,
உன் இசைக்கும்,
நம் உறவுக்கும்,
என்றும் வயதில்லை
வாழ்த்துக்கள்டா. #Ilaiyaraaja

உயிர்த் தோழன்
பாரதிராஜா. என்று பதிவிட்டுள்ளார்.