அதிமுக பொதுக்குழு கூடியது. ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா, நோபல் பரிசு வழங்க தீர்மானம்
- IndiaGlitz, [Thursday,December 29 2016]
தமிழக அரசியல் வட்டாரங்களின் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று காலை அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கூடியது. இந்த பொதுக்குழுவில் இதுவரை இல்லாத வகையில் மேடையில் 45 பேர் அமர்ந்திருந்தனர். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் 2770 பேர்களும், செயற்குழு உறுப்பினர்கள் 280 பேர்களும் பங்கேற்கின்றனர்
பொதுக்குழு கூடியதும் மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் இயற்றப்பட்டது. பின்னர் ஜெயலலிதாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்
இந்த பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் ஒருசில தீர்மானங்கள் இதோ:
முதல் தீர்மானமாக சசிகலா தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதி
பொதுச்செயலாளர் நியமனத்திற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி தீர்மானம் இயற்றப்பட்டது
ஜெயலலிதா மறைவின் போது சட்டம்-ஒழுங்கை காக்க உதவிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்
ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு, மகசசே விருதினை வழங்க கோரியும் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
ஜெயலலிதாவின் பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாட வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றம்.
மேலும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வரும் ஜனவரி 2ஆம் தேதி அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக பதவியேற்பார் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.