2-18 வயது உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி? எப்போது கிடைக்கும்?
- IndiaGlitz, [Thursday,May 13 2021]
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கோவேக்சின், கோவிஷுல்டு எனும் இரு கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு கட்டமாக அறிவிக்கப்பட்டு தற்போதுவரை 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும் 18 வயது கீழ் உள்ளவர்களுக்கு இதுவரை எந்த தடுப்பூசியும் பரிந்துரைச் செய்யப்படவில்லை. இதனால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
காரணம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மத்தியில் இதுவரை பெரும்பாலான கொரோனா தடுப்பூசிகள் சோதனை செய்யப்பட வில்லை. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை 2-18 வயதுள்ள குழந்தைகளின் மீது இரண்டாம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதன்படி கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் 2-18 வயதுள்ள குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய உள்ளது. இதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் நாக்பூரின் மெடிட்ரினா ஆய்வகம் இரண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும் இதில் முதற்கட்டமாக 525 குழந்தைகள் தன்னார்வலர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் 2-18 வயது குழந்தைகளுக்கான கோவேக்சின் கொரோனா தடுப்பூசி 2, 3 ஆம் கட்ட பரிசோதனையை வெற்றிக்கரமாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என இந்திய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனத் தலைவர் கிருஷ்ணன் கூறும்போது ஏற்கனவே குழந்தைகளின் மீது ரேபிட், போலியோ போன்ற தடுப்பு மருந்துகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல கொரோனா தடுப்பூசியும் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டு இந்தியாவில் 2-18 வயது குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவித்து உள்ளார்.