WHO பட்டியலில் இடம்பெறாத கோவேக்சின்… என்ன செய்ய போகிறது பாரத் பயோடெக்?
- IndiaGlitz, [Tuesday,May 25 2021]
இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அடிப்படையில் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தடுப்பூசி மருந்துக்கு WHO ஒப்புதல் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. காரணம் இந்தத் தடுப்பூசி மருந்தின் மீது வெளிநாடுகளில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகள் எதையும் பாரத் பயோடெக் நிறுவனம் WHO விற்கு அனுப்பவில்லை.
இதனால் கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வெளிநாடு செல்ல முனையும் இந்தியர்களுக்குப் புது சிக்கல் முளைத்து இருப்பதும் குறிப்பிடத்தகக்து. அதாவது WHO வின் அவசரகால பயன்பாட்டு பட்டியலில் இந்த கோவேக்சின் கொரோனா தடுப்பூசி இடம்பெறாததால் சில நாடுகள் கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை ஒரு ஆதாரமாக எடுத்துக் கொள்ள தயங்குகின்றன. இதனால் கோவேக்சின் செலுத்திக் கொண்டு வெளிநாடு செல்பவர்களுக்கு தடை விதிக்கப்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.
இதையடுத்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி மீதான 3 ஆம் கட்ட சோதனையைத் தற்போது அமெரிக்காவில் நடத்துவதற்கு உணவு மற்றும் மருத்துவக் கட்டுப்பாட்டு நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் WHO வின் அவசரகாலப் பயன்பாட்டு பட்டியலில் சேர்க்க தேவையான 90% ஆவணங்களை உலகச் சுகாதார அமைப்பிடம் சமர்ப்பித்து விட்டதாகவும் தற்போது பாரத் பயோடெக் நிறுவனம் மத்திய அரசிடம் கூறியுள்ளது. மேலும் WHO வின் ஒப்புதலைப் பெற கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி விண்ணப்பித்து விட்டதாகவும் இந்நிறுவனம் கூறியுள்ளது.
உலக அளவில் WHO ஆல் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி பாஸ்போர்ட் வழங்குவது குறித்து தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவேக்சின் அங்கீகாரம் குறித்து தற்போது கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதோடு கிட்டத்தட்ட 2 கோடி இந்தியர்கள் கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். இதனால் விரைவில் கோவேக்சின் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனை தரவுகளை உலகச் சுகாதார அமைப்பிடம் ஒப்படைத்து உரிய அங்கீகாரம் பெறுவதற்கு பாரத் பயோடெக் முனைப்பு காட்டி வருகிறது.
இந்த நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே 11 நாடுகளிடம் ஒழுங்குமுறை ஒப்புதல் பெறப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் கோவேக்சின் உற்பத்திக்கு உலகின் 7 நாடுகளில் உள்ள 11 நிறுவனங்களிடம் ஒப்புதல் பெறுவதற்கு பாரத் பயோடெக் பேச்சுவார்த்தை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.