எனக்கே தெரியாமல் எனக்காக டப்பிங் பேசிய எஸ்பிபி: கே.பாக்யராஜ் நினைவலைகள்
- IndiaGlitz, [Sunday,September 27 2020]
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்த துக்கம் இன்னும் திரையுலகினர்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. அவருடன் பணிபுரிந்த நிகழ்வுகளை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்
அந்த வகையில் நடிகர் இயக்குனர் பாக்யராஜ் சமூகவலைதளத்தில் எஸ்பிபி குறித்த நினைவலைகளை கூறியுள்ளார். தான் முதன் முதலாக நடிக்க கமிட்டான ’நீ சிரித்தால் நான் சிரிப்பேன்’ என்ற திரைப்படத்திற்கு எஸ்பிபி அவர்கள் எனக்காக ஒரு பாடலை பாடினார் என்றும், ஆனால் அந்தப் படம் எதிர்பாராத விதமாக ரிலீஸ் ஆகவில்லை என்றும் தெரிவித்தார்
அதன் பின்னர் தனது மனைவி பிரவீணா தெலுங்கில் தன்னை படங்கள் நடிக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் தமிழிலேயே பிஸியாக இருப்பதால் தன்னால் தெலுங்கில் நடிக்க முடியாது என்று கூறியதாகவும் தெரிவித்தார்
இந்த நிலையில் திடீரென தனது மனைவி பிரவீணா என்னை அழைத்துக்கொண்டு ’டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தின் தெலுங்கு டப்பிங் படத்தை எனக்கு போட்டுக் காட்டினார். எனக்கே தெரியாமல் அவர் அந்த படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து உள்ளார் என்பதும் அந்த படத்தில் எனக்காக தெலுங்கில் குரல் கொடுத்தவர் எஸ்பி பாலசுப்பிரமணியம் தான் என்பதை தெரிந்து கொண்ட எனக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது என்றும், எனக்கே தெரியாமல் எனக்கு எஸ்பிபி அவர்கள் குரல் கொடுத்ததும் அந்த குரல் மிக கச்சிதமாக பொருந்தும் வகையில் இருந்ததை பார்த்து தான் ஆச்சரியம் அடைந்ததாகவும் கே பாக்யராஜ் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்