பவானி ஆறு சர்ச்சையை மறுத்த போலீசார்.. புது விளக்கம் அளித்துள்ள பாக்யராஜ்..!
- IndiaGlitz, [Saturday,February 17 2024]
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர், இயக்குனர் பாக்யராஜ் வெளியிட்ட வீடியோவில் பவானி ஆற்றில் குளிக்க செல்லும் சில சுற்றுலா பயணிகளை அங்குள்ள சிலர் வேண்டுமென்றே தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்து விட்டு, அதன் பின் பிணத்தை எடுக்க பல பேரம் பேசுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் இது குறித்து காவல்துறை சார்பில் வெளியிட்ட விளக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுபோல் எந்த குற்றமும் நடைபெறவில்லை என்றும் எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறியதோடு இதுபோன்று வதந்தி பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் இது குறித்து பாக்யராஜ் தற்போது விளக்கம் அளித்து இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில், ‘நான் கேள்விப்பட்ட விஷயத்தை தான் அந்த வீடியோவில் நான் தெரிவித்து இருந்தேன், போலீஸ் மீது குற்றம் சொல்ல வேண்டும் என்ற நோக்கம் எனக்கு கிடையாது.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அங்கு நடந்த நிகழ்ச்சியை நான் கேள்விப்பட்ட நிலையில் பல இடங்களில் கூறுவது போல் சாதாரணமாகத்தான் அந்த நிகழ்வு பற்றி கூறினேன். மேலும் வதந்தி பரப்ப வேண்டும் என்ற நோக்கம் எனக்கு கிடையாது, ஒரு வதந்தி பரப்புவது என்றால் அதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருக்கும், ஆனால் எனக்கு எந்த விதமான காரணமும் கிடையாது.
நான் கேட்டறிந்த, கேள்விப்பட்ட விஷயத்தை மட்டுமே நான் பகிர்ந்தேன். இதனால் நான் போலீஸ் மீது தவறு சொல்வதாக அர்த்தம் கிடையாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுபோல் எதுவும் நடக்கவில்லை என்று போலீசார் கூறியிருப்பது எனக்கு மகிழ்ச்சி தான், ஆனால் நான் கேள்விப்பட்ட அளவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட நான் சொன்னது போல் நடந்ததாக பலரும் சொன்னார்கள், அந்த கருத்தை தான் நான் பகிர்ந்து இருந்தேன்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.