ரஜினி, கமலிடம் ஆலோசனை நடத்திய பிறகே போட்டியிடுகிறேன்: பாக்யராஜ்
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணிக்கு எதிராக போட்டியிடும் பாக்யராஜ் தலைமையிலான அணிக்கு நேற்று சுவாமி சங்கரதாஸ் அணி என பெயரிடப்பட்டுள்ளது. சுவாமி சங்கரதாஸ் அவர்கள் நாடக உலகின் தந்தை என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் நேற்று தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாக்யராஜ் கூறியதாவது: விஷாலின் பாண்டவர் அணி ஆரம்பத்தில் நன்றாகத்தான் செயல்பட்டு கொண்டிருந்தது. ஆனால் அந்த அணியில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதால் அந்த விரிசலை சரிசெய்யவே புதிய அணியை அமைத்துள்ளோம். இன்னும் தெளிவாக சொல்வதென்றால் நடிகர் சங்கத்தின் சவுகிதாராக நாங்கள் இருப்போம். நாங்கள் வெற்றி பெற்று பதவிக்கு வந்தால் நடிகர் சங்க கட்டட பணியை தொடர்ந்து செய்வோம். அதே நேரத்தில் கட்டட பணிக்காக ஆரம்பத்தில் இருந்து உழைத்த பாண்டவர் அணியில் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக முதல் மரியாதையும் கிடைக்கும்.
நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் முன்னர் ரஜினி, கமலிடம் ஆலோசனை செய்தேன். 'நீங்கள் தலைவர் பதவிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று ரஜினியும், 'யார் தலைவராக வந்தாலும் கட்டடம் கட்டும் பணி தொய்வில்லாமல் நடக்கவேண்டும் என்பதே தனது விருப்பம்' என்று கமலும் கூறினர். அவர்களிடம் ஆலோசனை செய்த பின்னரே போட்டியிடும் முடிவை எடுத்துள்ளேன்' என்று பாக்யராஜ் கூறினார்.
சுவாமி சங்கரதாஸ் அணியில் இருந்து தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரசாந்த், துணைத்தலைவர் பதவிக்கு உதயா, குட்டி பத்மினி, செயற்குழு உறுப்பினர் பதவிக்கு கே.எஸ்.ரவிகுமார், பூர்ணிமா பாக்யராஜ், சங்கீதா, ஆர்த்தி கணேஷ் , காயத்ரி ரகுராம், ரமேஷ் கண்ணா, பரத், ஷாம், நிதின் சத்யா உள்ளிட்டோர் போட்டியிடவுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout