'பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களுக்கு பின்னர் அனுஷ்கா ஷெட்டி நடித்த படம், அருந்ததி போன்ற மிரட்டும் பேய்ப்படம் என விளம்பரப்படுத்தப்பட்ட படம் தான் 'பாகமதி'. ரிலீசுக்கு முன்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் உண்மையில் ரசிகர்களை மிரட்டியதா? என்பதை தற்போது பார்ப்போம்.
மத்திய அமைச்சராக இருக்கும் ஜெயராம், மக்களின் நன்மதிப்பை பெற்றவர், நீராதார புரஜொக்ட் ஒன்றிற்காக தொடர்ந்து பாடுபடுபவர். இந்த நிலையில் இதே ரீதியில் அவரை விட்டால் மக்களின் அமோக ஆதரவை பெற்று தமிழகத்தின் சிஎம் ஆகிவிடுவார் என்று அவரது கட்சி மேலிடமே அவருடைய இமேஜை உடைக்க திட்டமிடுகிறது இதற்காக நியமிக்கப்படும் சிபிஐ அதிகாரி ஆஷா சரத், ஜெயராமிடம் உதவியாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரியும், கொலைக்குற்றம் ஒன்றுக்காக சிறையில் இருப்பவருமான அனுஷ்காவை யாருக்கும் தெரியாமல் வெளியில் எடுத்து ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் 'பாகமதி' பங்களாவில் தங்க வைத்து விசாரிக்கின்றார். அந்த பங்களாவில் அனுஷ்காவுக்கு பல அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் ஜெயராமை கெட்டவர் என்பதை நிரூபிக்க அனுஷ்காவிடம் இருந்து ஒரே ஒரு தகவல் கூட ஆஷா சரத்துக்கு கிடைக்காததால் இந்த விசாரணையில் இருந்து ஒதுங்கி கொள்ள முடிவெடுக்கின்றார். அப்போதுதான் தற்செயலாக ஒரு பொறி அவருடைய மனதில் பறக்கின்றது. அந்த பொறி என்ன? உண்மையில் அனுஷ்கா யார்? அந்த பங்களாவில் இருக்கும் அமானுஷ்ய சக்தி என்ன? ஜெயராமுக்கு இறுதியில் என்ன நேர்ந்தது? போன்ற பல அடுக்கடுக்கான புதிர்களுக்கு கிடைக்கும் விடைகள் தான் இந்த படத்தின் இரண்டாம் பாதி.
ஐஏஎஸ் அதிகாரி மற்றும் பாகமதி ஆகிய இரண்டு கெட்டப்புகளுக்கும் சரியான பொருத்தம் அனுஷ்காவின் தோற்றம். எனவே இயல்பாகவே அவர் இந்த இரண்டு கேரக்டர்களாக மாறிவிடுகிறர். இரண்டாம் பாதியில் ஏற்படும் ஒவ்வொரு திருப்பத்தின்போது அவர் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
அனுஷ்காவை அடுத்து அனைவரையும் கவர்பவர் ஆஷா சரத். அவர் விசாரணை செய்யும் பாணியில் 'பாபநாசம்' படத்தின் சாயல் இருந்தாலும் கேரக்டரை உள்வாங்கி கச்சிதமாக நடித்துள்ளார்.
அனுஷ்காவின் காதலராக நடித்திருக்கும் உன்னிமுகுந்தன் இந்த படத்தின் ஹீரோ என்ற பெயரை மட்டும் தட்டி செல்கிறார். பெரிதாக நடிப்பதற்கு வாய்ப்பு இல்லாத கேரக்டர்
அரசியல்வாதி கேரக்டரில் ஜெயராம், காவல்துறை அதிகாரி கேரக்டரில் முரளிஷர்மா, டாக்டர் கேரக்டரில் தலைவாசல் ஆகியோர் தங்கள் பங்கை சரியாக செய்துள்ளனர். வித்யூலேகா காமெடியை தர முயற்சித்துள்ளார்.
இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பேய்ப்படம் என்று நம்ப வைக்க முதல் பாதியில் மிக அதிக காட்சிகளை வைத்துள்ளார் இயக்குனர். ஆனால் இந்த காட்சிகள் இதற்கு முன் பார்த்த பல படங்களை ஞாபகப்படுத்துவதால் கொஞ்சம் சலிப்பு ஏற்படுகிறது. ஆனால் இந்த காட்சிகள் இரண்டாம் பாதியில் பல புதிர்களை விடுவிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதில் இயக்குனர் அசோக்கின் புத்திசாலித்தனம் தெரிகிறது. இரண்டாம் பாதியில் திருப்பத்திற்கு மேல் திருப்பத்தை தரும் திரைக்கதையை அமைத்துள்ள இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
எஸ்.தமன் இசையில் இரண்டே பாடல்கள். இரண்டுமே சுமார் தான். ஆனால் முதல் பாதியில் பேய்க்காட்சிகளுக்கும், இரண்டாம் பாதியின் விறுவிறுப்பான காட்சிகளுக்கும் பின்னணி இசை சூப்பர்.
முதல் பாதியின் பெரும்பான்மையான காட்சிகள் இருட்டில் இருந்தாலும் தெளிவாக இருப்பதற்கு ஒளிப்பதிவாளர் மதியின் உழைப்பே காரணம். மேலும் வெங்கடேஸ்வரராவின் படத்தொகுப்பும் இரண்டாம் பாதியில் மிக கச்சிதம். ஆனால் முதல் பாதியில் எடிட்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
மொத்தத்தில் இரண்டாம் பாதிக்காக படத்தை ஒருமுறை பார்க்கலாம்.
Comments