கொரோனா தடுப்பூசிக்கே பங்கம்… Google play store இல் உலவும் போலி செயலி!!!

  • IndiaGlitz, [Friday,January 08 2021]

அவசரக்கால பயன்பாட்டுக்காக இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கிட்டத்தட்ட 700 மாவட்டங்களில் கொரேனா தடுப்பூசிக்கான ஒத்திகை தொடங்கி உள்ளது. இந்த ஒத்திகை முடிந்தவுடன் வரும் ஜனவரி 13 ஆம் தேதி கொரோனா தடுப்பூசிகள் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவேக்சின் மற்றும் இந்தியாவின் கோவிஷீல்ட் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த 2 கொரோனா தடுப்பூசிகளுக்கும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதல் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் நபர்கள் சுயமாக coWin எனும் செயலிக்கு சென்று தங்களது சுய விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. இந்தச் செயலி அனைத்து மொபைல் போன்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி உருவாக்கப்பட இருக்கிறது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

ஆனால் இந்தச் செயலியை இன்னும் மத்திய அரசு அறிமுகப்படுத்த வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பயன்பாட்டுக்கே கொண்டுவரப்படாத coWin செயலி பெயரில் தற்போது பல போலி செயலிகள் Google play store உலா வருகின்றன. இதனால் இந்தச் செயலிகளை யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதுபோன்ற போலி செயலிகளால் கொரோனா தடுப்பூசி பயன்பாடு பாதிக்கப்படலாம் அல்லது தனிநபருக்கு அச்சுறுத்தலாகவும் விளைவிக்கலாம் எனக் கூறப்பட்டு உள்ளது.